அல்லிகுளத்தில் தொழில் பூங்கா; சூழல் அனுமதி கேட்கிறது சிப்காட்
சென்னை; துாத்துக்குடி அல்லிகுளத்தில் புதிய தொழில் பூங்கா அமைக்க, சுற்றுச் சூழல் துறையிடம், 'சிப்காட்' நிறுவனம் அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது. துாத்துக்குடியில் துறைமுகம் மற்றும் விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்பட்டதால், இம்மாவட்டம் மற்றும் திருநெல்வேலியில் தொழில் துவங்க, நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. எனவே, துாத்துக்குடி மாவட்டத்திலுள்ள அல்லிகுளம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில், 1,967 ஏக்கரில் புதிய தொழில் பூங்காவை அமைக்க, 'சிப்காட்' எனப்படும் தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது. இங்கு ஏற்கனவே நிலம் கையகப்படுத்தப்பட்டு, தயார் நிலையில் உள்ளது. இதையடுத்து இங்கு, சாலை, மழைநீர் வடிகால், தண்ணீர் வினியோகம், தெரு விளக்கு உள்ளிட்ட உள்கட்டமைப்பு பணிகளை மேற்கொள்வதற்காக, சுற்றுச்சூழல் துறையிடம், சிப்காட் நிறுவனம் அனுமதி கோரி விண்ணப்பம் செய்துள்ளது. 667 கோடி ரூபாயில் உள்கட்டமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் 17,000 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க திட்டம்
சிங்கப்பூர் நிறுவனம் முதலீடு
சிங்கப்பூர் நாட்டைச் சேர்ந்த ஆர்.ஜி.இ., நிறுவனம், 4,953 கோடி ரூபாயில், 1,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில், 'மேன்மேட்பைபர்' உற்பத்தி செய்யும் ஆலை அமைக்க, கடந்த 4ம் தேதி புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது. இந்நிறுவனத்துக்கு, துாத்துக்குடியில் புதிதாக உருவாக்கப்பட்ட தொழில் பூங்காவில் மனை ஒதுக்க அரசு முடிவு செய்துள்ளது.