சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி ஏப்ரல் முதல் குறைக்கப்பட வாய்ப்பு
புதுடில்லி:வரும் ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் குறைக்கப்படக் கூடும் என, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு நடக்கும் பட்சத்தில், கடந்த ஐந்து ஆண்டுகளில் வட்டி விகிதங்கள் குறைக்கப்படுவது இதுவே முதல் முறையாக இருக்கும். ரிசர்வ் வங்கி, வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 6.50 சதவீதத்திலிருந்து 6.25 சதவீதமாக குறைத்துள்ளதை அடுத்து, டிபாசிட்களுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் குறைக்கக்கூடும். இந்நிலையில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதமும் குறைக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. சிறு சேமிப்பு திட்டங்களுக்கு இணையான முதிர்ச்சி காலங்களை கொண்டுள்ள மத்திய அரசின் கடன் பத்திரங்களுக்கான வட்டி விகிதங்களுக்கு ஏற்ப, இவற்றுக்கான வட்டி விகிதங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இதை, காலாண்டுக்கு ஒரு முறை மத்திய நிதி அமைச்சகம் நிர்ணயம் செய்கிறது. வரும் ஏப்ரல் - ஜூன் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள் வரும் மார்ச் மாத இறுதியில் அறிவிக்கப்படும். நடப்பு ஜனவரி - மார்ச் காலாண்டுக்கான வட்டி விகிதங்கள், கடந்த டிசம்பர் மாதம் அறிவிக்கப்பட்டன. வட்டி விகிதங்கள் குறைக்கப்பட்டாலும், இத்திட்டங்களில் தொடர்ந்து அதிக முதலீடு செய்யப்படும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், பெரும்பாலான வங்கி டிபாசிட் திட்டங்களை காட்டிலும், இத்திட்டங்கள் வழங்கும் வட்டி சற்று அதிகமாகவே உள்ளது. இதற்கிடையே, 2023 - 24ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 'மஹிளா சம்மன் சேமிப்பு' சான்றிதழ் திட்டம், வரும் மார்ச் மாதத்துடன் முடிவுக்கு வரும் நிலையில், இத்திட்டத்தின் எதிர்காலம் குறித்து அரசு தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. மகளிருக்கான இத்திட்டத்தின் கீழ், அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை டிபாசிட் செய்யலாம். 7.50 சதவீதம் என்ற நிலையான விகிதத்தில் வட்டி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.