முதலீட்டு மானியம்: அலட்சியம் காட்டும் அதிகாரிகள்
சென்னை:சிறு, குறு நிறுவனங்களின் முதலீட்டை ஊக்குவிக்க, தமிழக அரசு முதலீட்டு மானியம் வழங்குகிறது. இயந்திரங்கள் மதிப்பில் 25 சதவீதம் அல்லது, 25 லட்சம் ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. இதேபோல் பின்தங்கிய பகுதிகளில் சிறு, நடுத்தர நிறுவனங்கள் தொழில் துவங்கினால், இயந்திரங்கள் மதிப்பில் 25 சதவீதம் அல்லது அதிகபட்சம் 1.50 கோடி ரூபாய் வரை மானியம் வழங்கப்படுகிறது. இந்த மானியத்தை பெற நிறுவனங்கள் விண்ணப்பித்த பின், மாவட்ட தொழில் மைய அதிகாரிகள் அதை பரிசீலித்து மானியம் வழங்க நடவடிக்கை எடுப்பர். தற்போது, மானியம் வழங்குவதற்கான போதிய நிதி இருந்தும், பல அதிகாரிகள் களத்திற்கு சென்று ஆய்வுகளை மேற்கொள்ளாமல், மானியம் வழங்குவதில் அலட்சியம் காட்டி வருவதாக தொழில்முனைவோர் புகார் தெரிவிக்கின்றனர். அம்பேத்கர் தொழில் முன்னோடி இதேபோல் சிறு, குறு, நடுத்தர தொழில் துறைக்கு தமிழக அரசு, 174 கோடி ரூபாய் விடுவிக்காமல் இருப்பதால், அம்பேத்கர் தொழில் முன்னோடி மற்றும் புதிய தொழில்முனைவோர் ஆகிய திட்டங்களின் கீழ் கடன் பெற்ற பயனாளிகளுக்கு, மானியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில், பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இளைஞர்களை தொழில்முனைவோராக ஊக்குவிக்க, அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தை, தமிழக அரசு செயல்படுத்துகிறது.இத்திட்டத்தின் கீழ், பட்டியலின மற்றும் பழங்குடியின இளைஞர்கள் உற்பத்தி, சேவை, வர்த்தகம் சார்ந்த தொழில் துவங்க, வங்கிகள் வாயிலாக கடன் கிடைக்க உதவி செய்யப்படுகிறது. இதற்கு, 35 சதவீதம் மூலதன மானியம், அதிகபட்சமாக 1.50 கோடி ரூபாய் வரையும், 6 சதவீதம் வட்டி மானியமும் அரசு வழங்குகிறது.இதுதவிர, புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம், படித்த இளைஞர்களை முதல் தலைமுறை தொழில்முனைவோராக உருவாக்கும் நோக்குடன் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ், உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்களில் குறைந்தபட்சம் 10 லட்சம் ரூபாய்; அதிகபட்சம் 5 கோடி ரூபாய் வரையும் கடன் கிடைக்க உதவி செய்யப்படுகிறது.இத்திட்டத்தில், 25 சதவீதம் மூலதன மானியம் அதிகபட்சமாக 75 லட்சம் ரூபாய் வரையும்; 3 சதவீதம் வட்டி மானியமும் வழங்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டில் இதுவரை அம்பேத்கர் திட்டத்தில் 5,324 பேரும்; புதிய தொழில்முனைவோர் திட்டத்தில் 2,726 பேரும் விண்ணப்பம் செய்துள்ளனர்.அம்பேத்கர் திட்டத்தில் தேர்வான பயனாளிகளுக்கு 137 கோடி ரூபாயும்; தொழில்முனைவோர் திட்ட பயனாளிகளுக்கு, 37 கோடி ரூபாயும் மானியமாக வழங்கப்பட வேண்டும். இந்த நிதியை அரசு, ஒதுக்கீடு செய்யாததால், பயனாளிகளுக்கு மானியம் வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மானியம் வழங்குவதற்கான போதிய நிதி இருந்தும், அதிகாரிகள் மானியம் வழங்குவதில் அலட்சியம் காட்டி வருவதாக தொழில்முனைவோர் புகார் தெரிவிக்கின்றனர்.