செய்க புதுமை நிகழ்ச்சிக்கு அழைப்பு
சென்னை:தமிழக அரசின், 'ஸ்டார்ட் அப் டி.என்' நிறுவனம், சென்னை தரமணியில் உள்ள சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்காவில், 'ஸ்டார்ட் அப் சென்னை செய்க புதுமை' நிகழ்ச்சியை வரும், 12ம் தேதி நடத்துகிறது. அதில், துணை முதல்வர் உதயநிதி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் அன்பரசன் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்கின்றனர்.அவர்கள், சென்னை நந்தனம் மெட்ரோ ரயில் வளாகத்தில், ஸ்டார்ட் அப் டி.என்., தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள சமூகநீதி ஆய்வகம், 'டிசைன் ஸ்டூடியோ' ஆகியவற்றை துவக்கி வைக்கின்றனர். இதுதவிர, ஸ்டார்ட் அப் எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் சில, தயாரித்த பொருட்களை அறிமுகம் செய்து வைக்கின்றனர். மேலும், தொழில் வல்லுனர்கள் பங்கேற்று, ஆலோசனைகள் வழங்க உள்ளனர். நிகழ்ச்சியில் பங்கேற்க விரும்பும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், சிறு, குறு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் டி.என்., தளத்தில் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சமூகநீதி ஆய்வகத்தில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களை துவக்கிய எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு தொழிலை மேம்படுத்த உதவிகள் வழங்கப்படும். டிசைன் ஸ்டூடியோவை புத்தொழில் நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புக்கு புதிய வடிவங்களை உருவாக்க பயன்படுத்தலாம்.