பவர் பைனான்ஸ் நிறுவனத்துக்கு ஜப்பான் ரூ.3,500 கோடி கடன்
புதுடில்லி:பசுமை எரிசக்தி திட்டங்களுக்காக பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் ஜப்பான் பேங்க் பார் இன்டர்நேஷனல் கோ-ஆப்பரேஷன் இடையே 3,500 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. டோக்கியோ நகரில் நடந்த நிகழ்ச்சியில், அரசுக்கு சொந்தமான, மிகப்பெரிய வங்கிசாரா நிதி நிறுவனமான பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷனின் தலைவர் பர்மீந்தர் சோப்ரா, ஜப்பான் பேங்க் பார் இன்டர்நேஷனல் கோ-ஆப்பரேஷன் கவர்னர் நோபுமிட்சு ஹயாஷி ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இதுகுறித்து பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: ஒப்பந்தம் கையெழுத்தாகி இருப்பதன் வாயிலாக, இந்தியா - ஜப்பான் இடையிலான பொருளாதார உறவுகள் மேலும் வலுவாகி உள்ளது. நிலையான வளர்ச்சியை நோக்கி முன்னேறுவதிலும் இது முக்கிய படியாக இருக்கும். பொருளாதார முன்னேற்றத்துடன் சுற்றுச்சூழலையும் காக்கும் வகையில் ஜப்பான் பேங்க் பார் இன்டர்நேஷனல் கோ -ஆப்பரேஷன் இந்த கடனுதவியை வழங்குகிறது. சுமிடோமோ மிட்சுயி பேங்கிங் கார்ப்பரேஷன் உள்ளிட்ட ஜப்பானிய வங்கிகள் இணைந்து இதை வழங்குகின்றன. இந்த 3,500 கோடி ரூபாய் கடனில் ஒரு பகுதியை பயன்படுத்தி, அசாம் மாநிலத்தில் மூங்கிலை பயன்படுத்தி, பயோ எத்தனால் மற்றும் ரசாயனங்கள் தயாரிக்கும் ஆலை அமைக்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.