| ADDED : பிப் 22, 2024 11:55 PM
புதுடில்லி : கல்வி தொழில்நுட்ப நிறுவனமான 'பைஜூஸ்' நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான ரவீந்திரனுக்கு, அமலாக்கத்துறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஆன்லைன் கல்வி தொழில்நுட்ப நிறுவனமான பைஜூஸ் நிறுவனம் மீது, அன்னிய முதலீடுகள் பெற்றது தொடர்பான பல்வேறு புகார்களின் அடிப்படையில் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது. இவ்வழக்கு தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்றத்தில் நடந்து வரும் விசாரணையில், இன்று நடைபெற உள்ள நிறுவனத்தின் அவசர பொதுக்குழுவிற்கு அனுமதி அளிக்கப்படுவதாகவும், பொதுக்குழுவில் எடுக்கப்படும் முக்கிய முடிவுகள், நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ஏற்கனவே, ரவீந்திரனுக்கு ஒரு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்ட நிலையில், தற்போது அமலாக்கத்துறை மேலும் ஒரு லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 9,362.35 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய செலாவணி விதி மீறல்களில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை தெரிவித்த குற்றச்சாட்டின் அடிப்படையில், கடந்த 2023 நவம்பரில் 'திங்க் அண்டு லேர்ன்' நிறுவனம் மற்றும் பைஜூஸ் ரவீந்திரனுக்கு, விளக்கம் கேட்டு அன்னிய செலாவணி நடுவர் ஆணையம் 'ஷோகாஸ்' நோட்டீஸ் அனுப்பியது. பைஜூஸ் நிறுவனம் மற்றும் அதன் தாய் நிறுவனமான திங்க் அண்டு லேர்ன் நிறுவனங்களின் வர்த்தக செயல்பாடுகள் குறித்தும் இந்நிறுவனம் வெளிநாடுகளுக்கு கணிசமான அளவு பணம் அனுப்பியதாகவும், வெளிநாடுகளில் முதலீடு செய்ததாகவும், இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு குற்றசாட்டுகளின் கீழ் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.