உப்பு உற்பத்தியில் இரண்டாமிடம் பிடிக்க சலுகைகளை எதிர்பார்க்கும் உற்பத்தியாளர்கள்
துாத்துக்குடி:உப்பு உற்பத்தியில் மூன்றாம் இடத்தில் உள்ள தமிழகத்தை இரண்டாம் இடத்திற்கு முன்னேற்ற மத்திய, மாநில அரசுகள் உதவ வேண்டும் என, உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் முதல்இடத்திலும், ராஜஸ்தான் இரண்டாமிடத்திலும், தமிழகம் மூன்றாம் இடத்திலும் உள்ளன. தமிழகத்தில் மட்டும், ஆண்டுக்கு, 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. குறிப்பாக, துாத்துக்குடி மாவட்டத்தில், 90 சதவீதம் உப்பு உற்பத்தி நடக்கிறது. எதிர்பார்ப்பு
இந்நிலையில், உப்பு உற்பத்தியில் இரண்டாவது இடத்தை பிடிக்க உற்பத்தியை அதிகரிக்க வேண்டும். இதற்கு மத்திய, மாநில அரசுகள் உதவினால் மட்டுமே சாத்தியமாகும் என, உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, உப்பு உற்பத்திக்கான ஆயத்த பணி நடந்து வருவதால், உற்பத்தியை அதிகரிக்க, உற்பத்தியாளர்களின் கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.துாத்துக்குடி மாவட்ட சிறு, குறு உப்பு உற்பத்தியாளர்கள் சங்க துணைத்தலைவர் முத்துபாண்டி கூறியதாவது:சிறு, குறு, பெரு உப்பு உற்பத்தியாளர்கள், உப்பளங்களை விரிவுபடுத்தவும், புதிய இடங்களில் அவற்றை அமைப்பதற்கும், அரசு உதவ வேண்டும். விலக்கு
மத்திய, மாநில அரசுகளின் பொறுப்பில் உள்ள உப்பு உற்பத்தி இடங்களை உற்பத்தியாளர்களுக்கு கொடுப்பதால், உற்பத்தியை அதிகரிக்க முடியும். உப்பு உற்பத்தி நிலங்களுக்கு, நில உச்ச வரம்பு சட்டத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாக்க, எளிமையான இன்சூரன்ஸ் வசதிகளை அறிமுகப்படுத்துவதுடன், இத்தொழிலை விவசாய பிரிவின் கீழ் கொண்டு வர வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.