சென்னை ஆலையில் மிஷலின் கார் டயர் உற்பத்தி
சென்னை ; வாகன டயர்களை உற்பத்தி செய்யும் பிரான்ஸ் நாட்டின் மிஷலின் டயர்ஸ் நிறுவனம், இந்தியாவில் முதல் முறையாக கார் டயர் உற்பத்தியை துவக்கி உள்ளது. திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் அமைந்துள்ள இந்நிறுவன ஆலையில் டயர் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த டயர்கள் அடுத்த ஆண்டின் முதல் பாதிக்குள் விற்பனைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரைமஸி 5 என்ற ரேடியல் டயர், இந்தியாவில் உற்பத்தியாகும் முதல் மிஷலின் கார் டயர் ஆகும். இந்த ஆலையில், லாரி மற்றும் பஸ்களுக்கான டயர்கள் மட்டும் உற்பத்தி செய்யப்பட்டு வந்த நிலையில், தேவை அதிகரித்ததால், இறக்குமதியை குறைத்து, உள்நாட்டில் கார் டயர் உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. இதற்காக, மொத்தம் 686 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இதில், 564 கோடி கடந்த ஆண்டில் முதலீடு செய்யப்பட்டது. சென்னை ஆலையில், 38 விதமான லாரி, பஸ், ராணுவ வாகனம், கார் டயர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. 100 சதவீதம் மறுசுழற்சி, 80 சதவீதம் மழைநீர் பயன்பாடு, 45 சதவீதம் பசுமை எரிசக்தியில் இந்த ஆலை இயங்குகிறது. இந்த ஆலையில், பயணியர் கார் டயர் உற்பத்தி தடம், வெறும் ஒரு ஆண்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது. தற்போது, நாடு முழுதும் 75க்கும் அதிகமான விற்பனை மையங்களை இந்நிறுவனம் வைத்துள்ளது. ஓட்டுநர்கள், நல்ல செயல்திறன் மற்றும் பாதுகாப்பை வழங்கும் டயர்களை எதிர்பார்கின்றனர். அதனால், பிரீமியம் மற்றும் சொகுசு எஸ்.யூ.வி., கார்களுக்கான 16 முதல் 22 அங்குல டயர்களை இங்கு உற்பத்தி செய்ய உள்ளோம். - ஷாந்தனு தேஷ்பாண்டே நிர்வாக இயக்குநர், மிஷலின் இந்தியா