அமெரிக்காவுக்கு முட்டை அனுப்ப நாமக்கல் மண்டலத்துக்கு வாய்ப்பு
நாமக்கல் :''நாமக்கல் மண்டலத்தில் இருந்து, அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உருவாகி உள்ளது. அதனால், 'நெக்' அறிவிக்கும் கொள்முதல் விலைக்கே, முட்டை விற்பனை செய்ய வேண்டும்,'' என, கோழிப்பண்ணையாளர்கள் ஆலோசனை கூட்டத்தில், 'நெக்' தலைவர் சிங்கராஜ் கூறினார்.நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழுவின், நாமக்கல் மண்டலம் சார்பில், கோழிப்பண்ணையாளர்களுக்கான ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. 'நெக்' மண்டல தலைவர் சிங்கராஜ் தலைமை வகித்து பேசியதாவது:நாமக்கல் மண்டலத்தில், 7 கோடி முட்டைக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. தற்போது நாளொன்றுக்கு, 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்தியாவிலேயே, நாமக்கல் மண்டலத்தில் தான் முட்டைக்கு அதிகமான விலை கிடைத்து வருகிறது. 'நெக்' மூலம், தினமும் முட்டை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. பண்ணையாளர்கள், 'நெக்' அறிவிக்கும் விலைக்கே முட்டையை விற்பனை செய்ய வேண்டும். அவற்றில் இருந்து குறைத்து விற்பனை செய்யாமல் இருந்தால், முட்டை விற்பனையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முடியும். வழக்கமாக, அரபு நாடுகளுக்கு அதிகளவில் முட்டை ஏற்றுமதி செய்யப் பட்டு வருகிறது. தற்போது, அமெரிக்காவிற்கும் முட்டை ஏற்றுமதி செய்வது குறித்து, அந்நாட்டு அதிகாரிகளுடன் பேச்சு நடந்து வருகிறது. விரைவில், அமெரிக்காவிற்கு முட்டை ஏற்றுமதி செய்ய வாய்ப்பு உள்ளது. இதனால், முட்டை விலை மேலும் உயர வாய்ப்புள்ளது. கோழித்தீவனத்திற்கு தேவையான முக்கிய மூலப்பொருளான மக்காச்சோளத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதால், முட்டை உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.