புதுடில்லி:துருக்கியைச் சேர்ந்த 'செலிபி' நிறுவனத்தின் அனுமதி சான்று ரத்தானதால், மும்பை, ஆமதாபாத் விமான நிலையங்களில் தரை வழி கையாளுதல் சேவைகள் இடைக்கால ஏற்பாடாக 'இந்தோ தாய் ஏர்போர்ட் சர்வீசஸ்' நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதானி ஏர்போர்ட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் இந்த விமான நிலையங்களில், துருக்கியைச் சேர்ந்த 'செலிபி' நிறுவனம் தரை வழி கையாளுதல் சேவைகளை வழங்கி வந்தது. தேர்வு
ஆனால், நிறுவனத்துக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு அனுமதி சான்றிதழை திரும்பப் பெறுவதாக, இரு நாட்களுக்கு முன்பு மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, இந்நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை உடனடியாக முறித்துக்கொள்வதாக, அதானி ஏர்போர்ட் நிறுவனம் அறிவித்தது.இந்தோ தாய் நிறுவனம், ஏற்கனவே நம் நாட்டின் ஒன்பது விமான நிலையங்களில், தரை வழி கையாளல் சேவைகளை வழங்கி வருகிறது. இதுமட்டுமல்லாமல், விரைவில் துவங்கப்படவுள்ள நவி மும்பை விமான நிலையத்தில் சேவை வழங்கவும், இந்நிறுவனமே தேர்வு செய்யப்பட்டுள்ளது. ஆணை
இதனிடையே, மும்பை விமான நிலையத்தில் உள்ள 3,000 செலிபி பணியாளர்களுக்கும், இன்னும் மூன்று மாத காலம் பணியாற்றுவதற்கான ஆணைகளை, இந்தோ தாய் நிறுவனம் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியா மறுப்பு
'துருக்கி ஏர்லைன்ஸ்' உடனான இண்டிகோ நிறுவனத்தின் ஒப்பந்தத்தை தடை செய்ய மத்திய அரசை வலியுறுத்தியதாக வெளிவந்த செய்திகளை, ஏர் இந்தியா மறுத்துள்ளது. முன்னதாக, துருக்கி ஏர்லைன்ஸ் உடனான இண்டிகோ நிறுவனத்தின் விமான குத்தகை ஒப்பந்தம், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடும் என கூறி, ஒப்பந்தத்தை தடை செய்ய, ஏர் இந்தியா, மத்திய அரசை வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகின. இந்நிலையில், இது முற்றிலும் தவறான தகவல் என்றும், ஒரு பொறுப்பான நிறுவனமாக, எப்போதுமே போட்டியாளர்கள் குறித்து கருத்து தெரிவிப்பதில்லை எனவும் ஏர் இந்தியா விளக்கமளித்துள்ளது.