ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் உற்பத்திக்கு புதிய திட்டம்
புதுடில்லி: ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் துறைக்கான மூன்றாம் கட்ட உற்பத்திசார் ஊக்குவிப்பு திட்டத்தை, மத்திய ஸ்டீல் மற்றும் கனரக தொழில்துறை அமைச்சர் குமாரசாமி டில்லியில் நேற்று துவக்கி வைத்தார். உள்நாட்டில் ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் உற்பத்தி திறனை மேம்படுத்தவும், சீனா உள்ளிட்ட நாடுகளிலிருந்து இவற்றின் இறக்குமதியை குறைப்பதுமே இதன் நோக்கமாகும். 'பி.எல்.ஐ., 1.2' என பெயரிடப்பட்டுள்ள இத்திட்டம், ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் துறையில் முதலீட்டை அதிகரிக்க உதவும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். கடந்த 2021 ஜூலையில் அறிமுகப்படுத்தப்பட்ட இத்திட்டத்துக்கு மொத்தம் 6,322 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர் மதிப்பிலான மற்றும் மேம்பட்ட தரத்திலான ஸ்டீல் ரகங்களின் உற்பத்தியை அதிகரிக்கவும், முதலீட்டை ஊக்குவிக்கவும் இத்திட்டம் அறிமுகமானது. பாதுகாப்பு, மின்சாரம், வான்வெளி மற்றும் உள்கட்டமைப்பு போன்ற முக்கிய துறைகளில், நாட்டின் இறக்குமதி சார்பை குறைப்பதே இதன் முக்கிய நோக்கமாகும். கடந்த 2024 - 25ம் நிதியாண்டை அடிப்படையாக கொண்டு செயல்படுத்தப்படும் இத்திட்டத்தின் கீழ், தேர்ந்தெடுக்கப்படும் நிறுவனங்களுக்கு, கூடுதல் உற்பத்தி மற்றும் விற்பனையின் அடிப்படையில், 4 முதல் 15 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும். இதற்கிடையே, முதல் இரண்டு கட்டங்களில், மொத்தம் 43,874 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளதாகவும், இதில் 22,973 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுவிட்டதாகவும், ஸ்டீல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் வாயிலாக, 13,000க்கும் அதிகமாக வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்ன வித்தியாசம்
அதிக வலிமை, அதிக கடினத்தன்மை, அரிப்பு எதிர்ப்பு, வெப்ப எதிர்ப்பு போன்ற சிறப்பு பண்புகளை கொண்டது ஸ்பெஷாலிட்டி ஸ்டீல் எனப்படுகிறது. இது, சாதாரண ஸ்டீலுடன் நிக்கல், குரோமியம், மாலிப்டினம் போன்ற பிற உலோகங்களை சேர்த்து தயாரிக்கப் படும் உயர்தர ஸ்டீல் ரகமாகும். சிறு நிறுவனங்களுக்கு பிரச்னை சந்தையில் ஸ்டீல் விலை குறைவாக உள்ளது, சிறு நிறுவனங்களுக்கு பிரச்னை ஏற்படுத்தியுள்ளதாக மத்திய ஸ்டீல் செயலர் சந்தீப் பவுண்ட்ரிக் தெரிவித்துள்ளார். விலை குறைவால் கிட்டத்தட்ட 150 சிறு நிறுவனங்கள் உற்பத்தியை நிறுத்திவிட்டதாக அவர் தெரிவித்தார். கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், விலை எவ்வளவு இருக்க வேண்டுமோ அதை விட அதிகமாக இருந்ததாகவும், தற்போது குறைவாக இருப்பதாகவும் அவர் கூறினார். சீனா உள்ளிட்ட சில நாடுகளில் ஸ்டீல் உற்பத்தி உபரியாக உள்ளதால், அனைத்து நாடுகளுக்கும் ஸ்டீல் குவிப்பு ஒரு பிரச்னையாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.