உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / ஆப்செட் பிரின்டிங் தொழில் மேம்படுத்த திட்டம் ரூ.32 கோடியில் பொது பயன்பாட்டு மையம்

ஆப்செட் பிரின்டிங் தொழில் மேம்படுத்த திட்டம் ரூ.32 கோடியில் பொது பயன்பாட்டு மையம்

திருப்பூர்:மத்திய, மாநில அரசுகளின் மானியம், 24 கோடி ரூபாயுடன், 32 கோடி ரூபாய் மதிப்பில், 'ஆப்செட் பிரின்டிங்' பொது பயன்பாட்டு மையம் அமைக்க, தமிழக அரசு அங்கீகார அனுமதி வழங்கியுள்ளது.தொழில்துறையினர், தனி குழுமமாக பதிவு செய்து, தங்கள் தொழில் வளர்ச்சிக்கு தேவையான வசதிகளை செய்து கொள்ள, மத்திய, மாநில அரசுகள் மானியம் வழங்கி ஊக்குவிக்கிறது. அதன்படி, ஜவுளி உற்பத்தி மற்றும் அது சார்ந்த தொழில் பிரிவுகளில், பொது பயன்பாட்டு மையம் அமைக்கப்பட்டு வருகிறது. திருப்பூரில், நிட்டிங், பிரின்டிங் துறைகளில் இதுபோன்ற மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, அதிநவீன இயந்திரங்களை வாங்கி, ஓரிடத்தில் நிறுவி, அனைவரும் பயன்படுத்தும் வாயப்பு உருவாக்கப்படுகிறது.இந்நிலையில், திருப்பூர் மாஸ்டர் பிரின்டர்ஸ் அசோசியேஷன் உறுப்பினர்கள் கூட்டாக இணைந்து, 32 கோடி ரூபாய் மதிப்பில், பொது பயன்பாட்டு மையம் அமைக்க, தமிழக அரசு நிர்வாக அனுமதி வழங்கியுள்ளது. மத்திய அரசின், 18 கோடி ரூபாய், மாநில அரசின், 6 கோடி ரூபாய் என, 24 கோடி ரூபாய் மானியம் மற்றும் குழுமத்தின் பங்களிப்பு 8 கோடி ரூபாய் என, 32 கோடி ரூபாய் மதிப்பில், பொது பயன்பாட்டு சேவை மையம் அமைக்க, அரசு அனுமதி வழங்கியுள்ளது.மாஸ்டர் பிரின்டர்ஸ் அசோசியேஷன் நிர்வாகிகள் கூறுகையில், 'பின்னலாடை நிறுவனங்களுக்கு, 'ஆப்செட்' பிரின்டிங் நிறுவனங்களின் சேவை மிகவும் அவசியம். கடந்த, 2000ம் ஆண்டுக்கு முன் நிறுவிய இயந்திரங்களையே இந்நிறுவனங்கள் பயன்படுத்தி வருகின்றன. இத்துறையில் புதிய தொழில்நுட்ப இயந்திரங்களை நிறுவும் வகையில், பொது பயன்பாட்டு சேவை மையம் அமைக்கப்படுகிறது. ஆப்செட் பிரின்டிங் தொழிலில் நவீனத்தை புகுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஆட்டோமேடிக் மல்டி கலர் பிரின்டிங், லேமினேஷன், கோட்டிங் உள்ளிட்ட அதிநவீன இயந்திரங்கள் பொது பயன்பாட்டு சேவை மையத்தில் நிறுவப்படும். தொழில்துறையினர், நவீன இயந்திரங்களை கூட்டாக பயன்படுத்தும் திட்டம், 2026ம் ஆண்டு துவக்கத்தில் பயன்பாட்டுக்கு வரும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ