உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / இந்தியாவில் 12 சதவிகிதம் பேரிடம் மட்டுமே கார் வாங்கும் வசதி இருக்கிறது மாருதி சுசூகி தலைவர் ஆதங்கம்

இந்தியாவில் 12 சதவிகிதம் பேரிடம் மட்டுமே கார் வாங்கும் வசதி இருக்கிறது மாருதி சுசூகி தலைவர் ஆதங்கம்

புதுடில்லி:இந்தியாவில் ஆண்டுக்கு 12 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உடைய 12 சதவீதம் பேர் மட்டும் கார் வாங்கும் வசதி கொண்டவர்களாக உள்ளனர். மீதமுள்ள 88 சதவீதம் பேர், சிறிய காரை கூட வாங்க முடியாத நிலையில் இருக்கின்றனர் என, மாருதி சுசூகி நிறுவனத்தின் தலைவர் ஆர்.சி. பார்கவா தெரிவித்துள்ளார்.இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தியாளரான மாருதி சுசூகி, நேற்று முன்தினம் தன் நான்காவது காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. சிறிய கார்கள் விற்பனை சரிந்ததுடன், நகர்ப்புற சந்தைகளில் தேவை குறைவால், நிகர லாபம் முந்தைய ஆண்டு இதே காலத்தோடு ஒப்பிடுகையில், 4.3 சதவீதம் குறைந்தது. இந்நிலையில், அந்நிறுவன தலைவர் பார்கவா கூறியதாவது: நடப்பாண்டில் சிறிய கார்கள் விற்பனை 9 சதவீதம் சரிந்து உள்ளது. நாட்டின் 88 சதவீத மக்களால் வாங்கப்படும் பட்ஜெட் கார் பிரிவில் இந்த சதவீத சரிவு ஏற்பட்டால், வளர்ச்சி எப்படி ஏற்படும். இந்தியாவில் 1,000 பேருக்கு 34 என்ற எண்ணிக்கையில் கார்கள் உள்ளன. உலகின் மற்ற நாடுகளைவிட, மிகவும் குறைவு இது.இந்தியாவில் ஆண்டு வருமானம் 12 லட்சம் ரூபாய்க்கு மேல் உடையவர்கள் 12 சதவீதம் பேர் மட்டுமே உள்ளனர். ஒரு கார் வாங்க வேண்டும் எனில், 10 லட்சம் ரூபாய்க்கு மேல் ஆகுமென்பதால், சாதாரணமாக குடும்ப வருமானம் மற்றவர்களால் வாங்க இயலாத நிலை உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். பயணியர் வாகனங்கள் விற்பனை வளர்ச்சி, ஆண்டுக்கு வெறும் 2- -3 சதவீதமே 2025 - -26ம் நிதியாண்டில், வாகன விற்பனை வளர்ச்சி 1 -- 2 சதவீதம் என சியாம் கணிப்பு கார்களின் விலை சராசரியாக 80,000 -- 90,000 ரூபாய் வரை உயர்ந்துள்ளது ஜப்பானில் மலிவு விலையில், 660 சி.சி., வரையிலான கீ கார்களை போன்று, இந்தியாவில் வரிச்சலுகை தேவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Kalyanaraman
ஏப் 29, 2025 09:09

ஈவி கார்களின் விற்பனையால் 35 வருடங்களுக்கு மேல் சந்தையில் இருக்கும் மாருதி கார் விற்பனை குறைந்திருக்கும். இத்தனை வருடங்களாக இவர்களுக்கு பணக்காரர்களாக தெரிந்த இந்தியர்கள் இன்று ஏழையாகி விட்டார்களா??


Kalyanaraman
ஏப் 29, 2025 07:47

கார் போகும் அளவுக்கு பரவலாக சாலை வசதி இல்லை. இருக்கும் சாலைகளிலும் போக்குவரத்து நெருக்கடி அதிகம். பார்க்கிங் செய்வதற்கு இடம் இல்லை. மேலும் ஓலா, உபர் எண்ணிக்கை பெருகியுள்ளதால் சொந்தக்காரன் தேவை குறைந்துள்ளது.


Rajan A
ஏப் 29, 2025 04:21

போதுமய்யா. இருக்கிற டிராஃபிக்யையே தாங்க முடியவில்லை.


m.arunachalam
ஏப் 29, 2025 00:20

வளர்ந்த நாடுகள் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கும் நாடுகளில் மாதாந்திர தவணை காரணமாக விழிபிதுங்கி மக்கள் கொடுமையை அனுபவிக்கிறார்கள் . நம் சீதோஷ்ண நிலைக்கு கார் அவசியமானதல்ல . தெளிதல் நலம் .


தத்வமசி
ஏப் 28, 2025 09:40

நான் வெளிநாட்டில் பதினாறு வருடங்கள் வசித்தேன், வேலை செய்தேன், சம்பாத்திதேன். கார் வாங்கினேன். வீடு வாங்கவில்லை. தாயகம் திரும்ப வந்தேன். நல்ல சம்பளம். வீடு கட்டினேன், கார் வாங்கினேன். வருமான வரி செலுத்துவதை குறைப்பதற்காக வேண்டி அதற்கான சேமிப்பு என்று கணக்கு துவங்கியது. அதில் முப்பது சதவிகிதம் சென்றது. இந்த பணம் முடக்கமாகி விட்டது. இது ஒரு நாள் வரும். அது வரை அதில் பணத்தை போட்டுக் கொண்டே இருக்க வேண்டும். பிள்ளைகள் படிப்பு, தரமான வாழ்க்கை என்று சென்றது. முதல் முறையாக ஜனவரி வந்தது வருமான வரி என்று ஒன்று வந்தது. இது வரை வருமான வரி கட்டியதில்லை. அதனால் முதல் அனுபவம். மூன்று-நான்கு மாதங்கள் பிடிப்பு நடந்தது. இப்போது தான் எனது சாதாரண இந்தியனின் வாழ்க்கை துவங்கியது. அந்த மூன்று-நான்கு மாதங்கள் அதாவது பிப்ரவரி முதல் ஏப்ரல் முடிய திக்கி திணறி கையில் இருந்த சேமிப்பினையும் வைத்து ஓட்ட வேண்டியதாகி விட்டது. செலவுகளில் கட். காரை வெளியில் எடுப்பதை நிறுத்தினோம், ஷாப்பிங் மால் செல்வதை நிறுத்தினோம். ஒவ்வொன்றாக கட். என்ன சிலவு செய்தாலும் அதில் வரி. வரி.. வரி.. காருக்கு வெறுமனே வருடத்தில் ஒரு முறை சர்வீஸ், காப்பீடு, இதர சிலவுகள். இப்போது கார் தேவையா? என்கிற எண்ணத்திற்கு வந்தாயிற்று. விற்று விடலாம் என்று நினைக்கிறோம். சொல்லுங்கள் நண்பரே. வருமான வரி செலுத்துபவனுக்கு என்ன சலுகை உள்ளது? முதலில் சாலைகள் ஒழுங்காக உள்ளனவா? டோல்கேட்டில் இலவசமாக செல்லலாம் என்று உள்ளதா? மருத்துவமனைகள் தரமாக உள்ளதா? தரமான அரசாங்க மருத்துவமனைகளில் அனுமதி தேவை என்றால் அதற்கு சிபாரிசு வேண்டும். பள்ளிகள் கேட்கவே வேண்டாம். சாலை, கல்வி, மருத்துவம் இவை தரமே இல்லை. இன்னொரு பக்கம் ஓட்டுக்காக இலவசம் இலவசம் என்று எங்கும் வரி வீணாகச் செல்கிறது. வரி செலுத்தும் மாதாந்திர ஊழியர்கள் வெறுப்படைந்து போய் உள்ளனர். இதில் கார் தேவையா ? கம்பெனி கொடுத்தால் கார் வாங்கலாம்.


Kalyanaraman
ஏப் 29, 2025 09:01

16 வருடங்கள் வெளிநாட்டில் வேலை செய்த போது எவ்வளவு வரி கட்டினீர்கள் என்று சொல்லவில்லையே? அப்படி கட்டி இருந்தால் அங்கிருந்து உங்களுக்கு என்னென்ன சலுகைகள் கிடைத்தது?


chennai sivakumar
ஏப் 28, 2025 08:00

அதுக்கே இங்கே சரியான ரோடு இல்லை. மீதி இருப்பார் கார் வாங்கினால் கார் மீது ஏறி நடந்துதான் செல்ல வேண்டும்.


புதிய வீடியோ