சென்னை:கட்டட வாடகைக்கு ஜி.எஸ்.டி., விதிக்கும் முறைக்கு, வணிகர்களிடம் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதுகுறித்து, தமிழக உணவுப்பொருள் வியாபாரிகள் சங்க கவுரவ ஆலோசகர் எஸ்.பி.ஜெயப்பிரகாசம் கூறியதாவது:பெரும்பாலான மளிகை கடைகள், வாடகை கட்டடங்களில் தான் செயல்படுகின்றன. இம்மாதம் முதல், வாடகைக்கு ஜி.எஸ்.டி., செலுத்துவதில் புதிய நடைமுறை வந்துள்ளது. அதன்படி, 'ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம்' முறையில் வாடகை கொடுப்பவரே, 18 சதவீதம் வரி செலுத்த வேண்டும். பெரிய நிறுவனங்கள் தங்களின் வணிகத்திற்காக செலுத்தும் ஜி.எஸ்.டி., வரியில், வாடகைக்கு செலுத்தும் வரியை கழித்துக் கொள்ளலாம். வாடகை கட்டடங்களில், 1.50 கோடி ரூபாய்க்கு கீழ் வணிகம் செய்யும் சிறு வணிகர்கள், 1 சதவீத ஜி.எஸ்.டி., செலுத்த வேண்டும். அவர்கள் தங்களின் வணிகத்திற்காக செலுத்தக்கூடிய வரியில், வாடகைக்கு செலுத்திய ஜி.எஸ்.டி., வரியை கழிக்க முடியாது. அதேபோல், 20 லட்சம் ரூபாய் வரை வணிகம் செய்யும் உற்பத்தியாளர்களோ, வணிகர்களோ, வாடகைக்கு செலுத்தும் வரியை ஜி.எஸ்.டி., செலுத்துவதில் கழிக்க முடியாது. நாடு முழுதும், 60 சதவீதம் பேர் சிறு வணிகர்கள், சிறு உற்பத்தியாளர்கள்தான். எனவே, ரிவர்ஸ் சார்ஜ் மெக்கானிசம் முறையை திரும்பப் பெற வேண்டும் என, மத்திய நிதி அமைச்சருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய நிலையே தொடர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.