மூலப்பொருளுக்கு குறைந்தபட்ச விலை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்பு
புதுடில்லி: முக்கிய மருந்து மூலப்பொருட்கள் இறக்குமதிக்கு, குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. சீனாவில் இருந்து மருந்து மூலப்பொருட்கள் அதிகளவில் இறக்குமதி செய்யப்படுவதால், நம் நாட்டில் மருந்து மூலப்பொருட்கள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது. இதனை தடுக்கும் நடவடிக்கையாக, பென்சிலின் ஜி, 6ஏபிஏ மற்றும் அமோக்ஸிசிலின் போன்றவற்றுக்கு குறைந்தபட்ச இறக்குமதி விலை நிர்ணயிக்க மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. ஆனால், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் தெரிவித்துள்ளதாவது: மத்திய அரசின் முடிவால், உள்நாட்டில் மருந்து மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பதோடு, மருந்து விலை அதிகரிக்க கூடும். ஆன்டி-பயோடிக் மருந்துகளில் முக்கிய மூலப்பொருட்களான இவற்றுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிப்பதால், இதனை சார்ந்துள்ள 10,000க்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் பாதிக்கப்படும். இவற்றை சார்ந்துள்ள, கிட்டத்தட்ட 2 லட்சம் பேருக்கு வேலையிழப்பு ஏற்படும். இவ்வாறு தெரிவித்துள்ளன.