தனியார் துறை ஆராய்ச்சியை ஊக்குவிக்க ரூ.1 லட்சம் கோடி நிதியுதவி திட்டம் பிரதமர் மோடி துவக்கி வைத்தார்
புதுடில்லி: ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களில் தனியார் துறையின் பங்களிப்பை ஊக்குவிக்கும் வகையில், 1 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்துள்ளார். வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாட்டை டில்லியில் துவக்கி வைத்த பிரதமர் இத்திட்டத்தை அறிமுகம் செய்தார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: சர்வதேச நடைமுறையில் மிக வேகமாக புதிய மாற்றம் ஏற்பட்டு வருவதை அனைவரும் காண்கிறோம். தற்போதைய 21ம் நுாற்றாண்டில் வேகமாக வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கண்டுபிடிப்புகளின் போக்கை வடிவமைக்கவும், மனிதகுலத்தின் பொதுவான சவால்களுக்கு தீர்வுகளை வழங்கவும் சர்வ தேச நிபுணர்களின் கூட்டு ஒத்துழைப்பு இன்றி யமையாதது. ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனியார் துறை முதலீட்டை ஊக்குவிக்கும் வகையில், 1 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதைக்கொண்டு, பொது மக்களுக்கு பயனளிக்கும் வகையில், புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே அரசின் நோக்கம். இத்திட்டத்தின் கீழ் முதன்முறையாக, அதிக ரிஸ்க் உடைய, அதிக தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு மூலதனம் ஒதுக்கப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார். அதிக ரிஸ்க் உடைய, அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு திட்டங்களுக்கு இந்தியா ஆதரவு ஜி.டி.பி.,யில் 0.60 சதவீதம் மட்டுமே உள்ள ஆர் அண்டு டி.,யை அதிகரிக்க, தனியார் துறை பங்களிப்பை 36%ல் இருந்து உயர்த்த இலக்கு சீனா, தென் கொரியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் தனியார் துறை பங்களிப்பு 75 சதவீதமாக உள்ளது. முக்கியத்துவம் டில்லி பாரத் மண்டபத்தில் முதலாவது 'வளர்ந்து வரும் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் புத்தாக்க மாநாடு' மூன்று நாட்கள் நடக்கிறது. நோபல் பரிசு பெற்றவர்கள், பிரபல விஞ்ஞானிகள், ஆராய்ச்சியாளர்கள், கல்வியாளர்கள், கொள்கை வடிவமைப்பாளர்கள், தொழில்துறையினர் என 3,000க்கும் அதிகமானோர் இதில் பங்கேற்கின்றனர். ஆண்டுதோறும் இந்த மாநாட்டை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.