ஒரே நபர்; பல தனிநபர் கடன் கிடுக்கிப்பிடி போட்ட ஆர்.பி.ஐ.,
புதுடில்லி:இனிமேல் ஒரே வருமான சான்றைக் காட்டி, வெவ்வேறு இடங்களில், பல தனிநபர் கடன்களை வாங்குவதை தடுக்கும் வகையில், ரிசர்வ் வங்கி கிடுக்கிப்பிடி போட்டுள்ளது. வங்கிகள் மற்றும் கடன் வழங்கும் நிறுவனங்கள், ஒருவரது கடன் விபரங்களை 15 நாட்களுக்கு ஒரு முறை அப்டேட் செய்வதை, புத்தாண்டில் ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கி உள்ளது. இதனால் ஒரே நபர் பல இடங்களில் தனிநபர் கடன் வாங்குவது, தடுக்கப்படும்.வங்கிகள், நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் இ.எம்.ஐ., தகவல்களை மாதம் ஒரு முறை அப்டேட் செய்தால் போதும் என்ற நிலை இதுவரை இருந்தது. ஆனால் அவ்வாறு அப்டேட் செய்யப்படும் தகவல்கள், கடன் தகவல் மத்திய தொகுப்பில் பிரதிபலிக்க 40 நாட்கள் வரை ஆனது. இதனால் வங்கிகளுக்கு இ.எம்.ஐ., செலுத்த தவறிய அல்லது காலம் தாழ்த்தி செலுத்திய வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்கள் கிடைப்பதில் தாமதமானது. அதற்குள், வருமான சான்றைக் காட்டி, வேறு வங்கியில் கடன் வாங்கி விடுவதும், தவணை தவறுவதும் நடந்தன. இதனால் வங்கிகளின் வாராக் கடன் அதிகரித்து, அவர்களது வணிகம் பாதிக்கப்படுகிறது. இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்கவும், உடனடி மற்றும் நம்பத்தகுந்த தகவல்களைக் கொண்டு வங்கிகள் கடன் வழங்குவது குறித்து முடிவெடுக்கும் வகையிலும், இந்த புதிய விதிமுறையை ரிசர்வ் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் வாயிலாக, இரண்டு வாரங்களுக்குள் புதிய கடன் பெறுவது சாத்தியமல்ல என்பதால், சரியாக கடனை திருப்பி செலுத்தாத ஒருவர், பல்வேறு தனி நபர் கடன்களை பெறுவதுதடுக்கப்படும்.