மகளிர் நிதி தேவைக்கு தீர்வு தரும் புத்தொழில்களுக்கு ஆர்.பி.ஐ., உதவி
புதுடில்லி:பெண்களின் நிதி தேவைகளை மையமாகக் கொண்டு தீர்வளிக்கும் நிதி தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களை மேம்படுத்த ரிசர்வ் வங்கியின் கீழ் இயங்கும் இன்னோவேஷன் ஹப் எனும் கண்டுபிடிப்பு மையம் மற்றும் ஐ.ஐ.எம்.ஏ., வென்ச்சர்ஸ் நிறுவனம் இணைந்து புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. 'ஸ்வனாரி டெக் ஸ்பிரிண்ட் 3.0' என்ற இத்திட்டத்தின் வாயிலாக, பெண்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் புதிய தீர்வுகள் கண்டுபிடிக்க புத்தொழில்களுக்கு ஊக்கமளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலின சமத்துவத்தை மையப்படுத்தி நிதி தீர்வுகள் வழங்கும் புத்தொழில் நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனங்களுக்கு தேவையான வழிகாட்டுதல்கள், மானியங்கள் மற்றும் பிற உதவிகள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. புதுமையை ஊக்குவித்து, நிதி தொழில்நுட்ப புத்தொழில்களை மேம்படுத்துவதன் வாயிலாக, நிதிச் சேவையில் பெண்களை உள்ளடக்கிய மேம்பாட்டுக்கான வழிகளை வகுத்து வருவதாக ரிசர்வ் வங்கி கண்டுபிடிப்பு மையம் தெரிவித்துள்ளது. மேலும், பெண்களின் பொருளாதார மேம்பாட்டை அதிகரிக்கும் பயனுள்ள தீர்வுகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.