கதிசக்தியின் கீழ் 228 திட்டங்களுக்கு பரிந்துரை
புதுடில்லி:பிரதமரின் 'கதிசக்தி' திட்டத்தின் கீழ் 15.89 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான 228 கட்டமைப்பு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து, தொழில் மேம்பாடு மற்றும் உள்வர்த்தகத் துறையின் செயலர் ராஜிவ் சிங் தாக்குர் கூறியதாவது:பிரதமரின் கதிசக்தி கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம், 2021 அக்டோபர் 13ம் தேதி துவங்கப்பட்டது. இதன் கீழ் வரும் கட்டமைப்பு திட்டங்களை, 'நெட்வொர்க் பிளானிங் குரூப்' என்ற என்.பி.ஜி., அமைப்பு அரசுக்கு பரிந்துரைக்கிறது. என்.பி.ஜி.,க்கு இதற்கான பரிந்துரையை தொழில் மேம்பாடு மற்றும் உள்வர்த்தக துறை அளிக்கிறது.இதுவரை 228 திட்டங்கள் மதிப்பிடப்பட்டு, மொத்தம் 15.89 லட்சம் கோடி ரூபாயில் நிறைவேற்ற, துறை ரீதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதில், 108 சாலைத் திட்டங்கள், 85 ரயில்வே திட்டங்கள், 12 நகர வளர்ச்சி, நான்கு எண்ணெய், எரிவாயு திட்டங்கள் இடம்பெற்றுள்ளன.கதிசக்தி திட்டத்தில் மேற்கொள்ளப்படும் கட்டமைப்பு திட்டங்களுக்கு காலக்கெடு குறைப்பு, உடனடி தொகை ஒதுக்கீடு உட்பட பல்வேறு சலுகைகள் கிடைக்கும். இவ்வாறு ராஜிவ் சிங் தாக்குர் கூறினார்.