பாஸ்மதி அல்லாத அரிசி ஏற்றுமதிக்கு பதிவு கட்டாயம்
புதுடில்லி:பாஸ்மதி அல்லாத அரிசி ரகங்களின் ஏற்றுமதிக்கு, மத்திய அரசு புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'பாஸ்மதி அல்லாத அரிசி ரகங்களை ஏற்றுமதி செய்ய விரும்பும் வர்த்தகர்கள், ஏ.பி.இ.டி.ஏ., எனும் விவசாயம் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையத்திடம் பதிவு செய்ய வேண்டியது கட்டாயமாகும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய வர்த்தகத்துறை அமைச்சகத்தின் ஒரு பிரிவான இந்த ஆணையத்திடம் பதிவு செய்த பின் தான், அரிசியை ஏற்றுமதி செய்ய முடியும். நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் - ஆகஸ்ட் காலகட்டத்தில், 41,360 கோடி ரூபாய் மதிப்பிலான பாஸ்மதி அல்லாத அரிசி ரகங்களை இந்தியா ஏற்றுமதி செய்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 6.40 சதவீதம் அதிகமாகும். இது தொடர்பாக மத்திய அரசு உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்ததாவது: இந்த நடவடிக்கை, எவ்வளவு அரிசி ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதையும், எங்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது என்பதையும் கண்காணிக்க உதவும். மேலும், நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்யவும் வழிவகுக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.