| ADDED : மார் 20, 2024 11:00 PM
கோல்கட்டா:தரமற்ற, மோசமான தேயிலைகளால், தேயிலை சந்தை மிகவும் பாதிப்படைந்துள்ளதாக, சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் சங்கம் கவலை தெரிவித்துள்ளது. 'சிஸ்டா' எனப்படும், இந்திய சிறு தேயிலை உற்பத்தியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு, சந்தையில் அதிகரித்து வரும் தரம் குறைந்த தேயிலைகளால், ஒட்டுமொத்த தேயிலையையும் தரம் குறைந்ததாக கூறப்படுவது குறித்து கவலை தெரிவித்தது. மேலும், இவ்விஷயத்தில் தேயிலை வாரியம் தலையிட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. இது குறித்து தேயிலை வாரிய தலைவர் ஏ.எஸ்.பாட்டியாவுக்கு, சிஸ்டா தலைவர் பிஜோய் கோபால் சக்கரவர்த்தி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: உள்நாட்டு சந்தையில் மோசமான, தரமற்ற தேயிலைகள் அதிகரித்திருப்பதையும், இவை மிகக் குறைந்த விலைக்கு விற்கப்படுவதையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம். தரமற்ற தேயிலை உற்பத்தி மற்றும் பேக்கேஜிங் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும். தற்போது 18 வயது முதல் 22 வயது வரை உள்ள இளம் பருவத்தினர் தேநீர் அருந்துவதில் இருந்து விலகி வருகின்றனர். குளிர்பானம் மற்றும் காபி மீது அதிக ஈடுபாடு கொண்டுள்ளனர். தனிநபர் உள்நாட்டு நுகர்வு அதிகரிக்க, தேநீர் குடிப்பதால் ஏற்படும் ஆரோக்கிய நலன்கள் குறித்து பொதுவான பிரசாரம் தேவை.கடந்த 7 ஆண்டுகளாக, பசுந்தாள் விலை ஏறக்குறைய தேக்க நிலையில் உள்ளதாலும், உற்பத்தி செலவு அதிகரித்துள்ளதாலும், குறைந்தபட்ச ஆதரவு விலை அல்லது நியாயமான விலை தேவை. பச்சை இலை தேயிலைக்கு லாபகரமான விலை இல்லை என்றால், சிறு தேயிலை விவசாயிகள் தங்களை தக்கவைத்துக் கொள்ள முடியாது. ஆகையால், இத்தகைய பிரச்னைகளில் தேயிலை வாரியம் தலையிட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த தேயிலை உற்பத்தியில், 50 சதவீதத்திற்கும் மேலான பங்களிப்பை, சிறு தேயிலை விவசாயிகள் வழங்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.