375 கோடி ரூபாய் நிலுவை தொகை பெரிய நிறுவனங்களிடமிருந்து வசூல்
சென்னை:பெரிய நிறுவனங்கள் பணம் நிலுவை வைக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் தமிழக அரசின் வசதியாக்கல் குழுக்கள் வாயிலாக 2,008 சிறுதொழில் நிறுவனங்களுக்கு, 375 கோடி ரூபாய் பெற்று தரப்பட்டுள்ளது.சிறுதொழில் நிறுவனங்களிடம், உதிரிபாகங்கள் உட்பட பல்வேறு பொருட்களை வாங்கும் பெரிய நிறுவனங்களில் பலவும், குறித்த காலத்தில் பணத்தை தருவதில்லை. இதனால், கட்டட வாடகை, மின் கட்டணம், ஊழியர் சம்பளம் உள்ளிட்ட செலவுகளை சமாளிக்க முடியாமல், சிறுதொழில் நிறுவனங்கள் நிதி நெருக்கடிக்கு ஆளாகின்றன. தொழில்கள் முடங்கும் அபாயமும் ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வு காண, தமிழக அரசின் சிறு, குறு, நடுத்தர தொழில் துறை சார்பில், சென்னை, கோவை, திருச்சி, மதுரை ஆகிய மண்டலங்களில் வசதியாக்கல் குழு அமைக்கப்பட்டு உள்ளன. பாதிக்கப்படும் சிறு நிறுவனங்களிடம் ஒவ்வொரு மாதமும் மனு பெற்று, குழு விசாரணை நடத்துகிறது. வசதியாக்கல் குழுவின் தீர்ப்பை எதிர்த்து, நிறுவனங்கள் உயர் நீதிமன்றத்தில் மட்டுமே மேல்முறையீடு செய்ய முடியும். கடந்த மூன்றரை ஆண்டுகளில், புகார்களை விசாரித்து இதுவரை, 2,008 நிறுவனங்களுக்கு 375 கோடி ரூபாய் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.45 நாட்களுக்கு மேல் பணம் கிடைக்காமல் பாதிக்கப்படும் நிறுவனங்கள், வசதியாக்கல் குழுவில் புகார் அளிக்கலாம்