தமிழக அரசின் புரிந்துணர்வு ஒப்பந்தம் தொடர்பாக குவியும் ஆர்.டி.ஐ., கடிதங்கள்
சென்னை:தமிழக அரசு, தொழில் முதலீடுகளை ஈர்க்க பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இது தொடர்பான முழு விபரங்களை பலர், ஆர்.டி.ஐ., எனும் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக கேட்டு வருகின்றனர்.தமிழக அரசு, தொழில் முதலீட்டை ஈர்க்க, இந்தாண்டு ஜனவரியில் உலக முதலீட்டாளர்கள் மாநாடை நடத்தியது. அதில், 6.64 லட்சம் கோடி ரூபாய்க்கு முதலீட்டை ஈர்க்க, பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டது. இதுதவிர, துபாய், ஜப்பான், ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகளுக்கும் தமிழக அரசின் உயர்மட்டக் குழு சென்று, பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தது.இவை தொடர்பான முழு விபரங்களையும் தொழில் துறையினரிடம், ஆர்.டி.ஐ., எனப்படும் தகவல் அறியும் உரிமை சட்டம் வாயிலாக எதிர்க்கட்சியினர், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கேட்டு வருகின்றனர். இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:இதற்கு முந்தைய ஆட்சி மற்றும் தற்போதைய ஆட்சியில் எவ்வளவு முதலீடுகள் ஈர்க்கப்பட்டன; என்னென்ன நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்தன; எத்தனை நிறுவனங்கள் தொழில் துவங்கின என்பது போன்ற விபரங்களை பலரும் ஆர்.டி.ஐ., வாயிலாக கேட்டு வருகின்றனர். அவர்களுக்கு உரிய பதில்கள் அனுப்பப்பட்டு வருகின்றன.இவ்வாறு அவர் கூறினார்.