சிறு வங்கிகளின் முன்னுரிமை கடன் இலக்கு 15 சதவிகிதம் குறைப்பு
புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான சிறிய வங்கிகளின் முன்னுரிமைத் துறை கடன்கள் இலக்கை 75 சதவீதத்தில் இருந்து, 60 சதவீதமாக ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது. கடந்த ஏப்.,1 முதல் இது அமலுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளது. விவசாயம், சிறுதொழில், ஏற்றுமதி, கல்வி, வீடு, சமூக கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, பின்தங்கியோர் ஆகிய பிரிவுகளுக்கு அளிக்கப்படும் கடன்கள், முன்னுரிமைத்துறை கடன் பிரிவில் உள்ளன. கடந்த மார்ச்சில், வங்கிகள் அளிக்கும் வீட்டுக்கடன், கல்விக்கடன் உள்ளிட்ட முன்னுரிமை துறை கடன்களுக்கான வழிகாட்டுதல்களை ரிசர்வ் வங்கி மாற்றியமைத்து இருந்தது. இதே போன்று, நகர கூட்டுறவு வங்கிகளின் முன்னுரிமை துறை கடன் இலக்கை 75 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக குறைத்து இருந்தது. சிறு வங்கிகளின் மொத்த கடன் இலக்கில், முன்னுரிமை பிரிவு கடன் இலக்கு குறைக்கப்பட்டுள்ளதால், இப்பிரிவைச் சேர்ந்த கடன் வழங்கல் குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.