பாஸ்டேக் இல்லாமல் பயணம் யு.பி.ஐ.,க்கு சிறப்பு சலுகை
புதுடில்லி:டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக, சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் இல்லாத பயனர்கள், யு.பி.ஐ., வாயிலாக பணம் செலுத்தினால் கட்டணத்தில் சலுகை அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் ஆண்டுக்கு 3000 ரூபாய் செலுத்தி நாடு முழுதும் பயணிக்கும் திட்டம் ஆக.15 முதல் அமலுக்கு வந்தது. பாஸ்டேக் இல்லாத பயனர்கள், சுங்கச்சாவடிகளில் இரு மடங்கு கட்டணம் செலுத்தி வரும் நிலையில், மத்திய சாலை போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது: டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதுடன், ரொக்க பரிவர்த்தனையை குறைக்கும் நடவடிக்கையாக, தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடிகளில் பாஸ்டேக் இல்லாத பயனர்களுக்கு கட்டணத்தில் மாற்றம் செய்யப்படுகிறது. தற்போது, செல்லாத பாஸ்டேக் வைத்துள்ள பயனர்கள், ரொக்கமாக செலுத்தினால், இரு மடங்கு கட்டணமாக செலுத்த வேண்டும். புதிய விதியின்படி யு.பி.ஐ., வாயிலாக கட்டணத்தை செலுத்துவோருக்கு வாகனத்தின் வகையை பொறுத்து, 1.25 மடங்கு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும். நவ.15 முதல் புதிய கட்டண விதிகள் அமலுக்கு வரும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளது.