தைவான் லேப்டாப் சென்னையில் தயாரிப்பு
புதுடில்லி:தைவானை சேர்ந்த லேப்டாப் தயாரிப்பாளரான எம்.எஸ்.ஐ., நிறுவனம், சென்னை ஆலையில் தயாரிப்புகளை துவங்கியுள்ளதாக, அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது.இதுகுறித்து மேலும் தெரிவித்திருப்பதாவது: 'மேக் இன் இந்தியா' திட்டத்தின் நோக்கத்திற்கு ஏற்ப, 'எம்.எஸ்.ஐ., மாடர்ன் 14, தின் 15' ஆகிய இரண்டு லேப்டாப் மாடல்கள் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்பட உள்ளன. நிறுவனத்தின் வேகமாக வளர்ந்து வரும் சந்தைகளில் ஒன்றாக, இந்தியா மாறியுள்ளது. இதைத்தொடர்ந்து, தயாரிப்புகளை நாடு முழுதும் எளிதில் அணுகக் கூடியதாக மாற்ற திட்டமிடப்பட்டுள்ளது.அதற்கேற்ப, நிறுவனத்தின் சில்லரை விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதுடன், விற்பனையை மேம்படுத்த 'குரோமா, ரிலையன்ஸ் ரீடெய்ல்' போன்ற நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவும் உள்ளது. இவ்வாறு தெரிவித்துள்ளது.