உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / தமிழகத்தில் தொழில் துவங்குவது குறித்து ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்துடன் பேச்சு

தமிழகத்தில் தொழில் துவங்குவது குறித்து ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்துடன் பேச்சு

சென்னை:தமிழகத்தில் தொழில் துவங்குவது மற்றும், 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா விமான தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவது குறித்து, ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனத்துடன், அமைச்சர் ராஜா நேற்று பேச்சு நடத்தியுள்ளார்.உலகில், வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில், அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் அட்டாமிக்ஸ் நிறுவனம் முன்னணியில் உள்ளது.

ஆளில்லா விமானம்

இந்நிறுவனம், 31 'பிரிடேட்டர் ட்ரோன்' எனப்படும், அதிநவீன ஆளில்லா போர் விமானங்களை வழங்க, நம் நாட்டின் ராணுவ அமைச்சகத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து உள்ளது. இந்த விமானம், 30 மணி நேரம், 2,000 கி.மீ., தொடர்ந்து பயணிக்கும் திறன் உடையவை. இது, கண்காணிப்பு போன்றவற்றுக்கு பயன்பட உள்ளது. இந்த விமானங்கள், அமெரிக்காவில் இருந்து வர இருந்தாலும், அவற்றின் பராமரிப்பு பணி நம் நாட்டில்தான் மேற்கொள்ள வேண்டும். இதற்காக பணிகளை மேற்கொள்வதற்கான தொழில் துவங்க, அட்டாமிக்ஸ் ஜெனரல் நிறுவனம், பல மாநிலங்களில் இடம் பார்த்து வருகிறது.இந்நிலையில், அந்நிறுவனத்தின் உயரதிகாரிகளுடன், சென்னையில் தொழில் துறை அமைச்சர் ராஜா, செயலர் அருண் ராய், 'டிட்கோ' மேலாண் இயக்குநர் சந்தீப் நந்துாரி ஆகியோர் நேற்று பேச்சு நடத்தினர். இதில், தமிழகத்தில் தொழில் துவங்க வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டதுடன், 'ட்ரோன்' தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவது குறித்து பேசப்பட்டுள்ளது.இதுகுறித்து, அமைச்சர் ராஜா அறிக்கை:வான்வெளி மற்றும் பாதுகாப்பு துறையில் உலகளவில் முன்னணியில் இருக்கும் ஜெனரல் அட்டாமிக்ஸ் உடன் பல்வேறு முக்கிய வாய்ப்புகள் குறித்து விவாதித்தோம். இதில் முக்கியமாக, 'ட்ரோன்' தொழில்நுட்பத்தில் இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்பு குறித்து பேசினோம்.

உலகளாவிய பாதுகாப்பு

தமிழகத்தின் திறன்மிக்க மனிதவளம், வலுவான உள்கட்டமைப்பை கருத்தில் கொண்டு, ஒருங்கிணைந்த வளர்ச்சி திட்டங்களை ஆராய்ந்தோம். தமிழகத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்க சாத்தியக்கூறு பற்றி ஆலோசனை நடந்தது. தமிழகத்தில் பாதுகாப்பு தொழில் பெருவழித்தடம், உலகளாவிய பாதுகாப்பு, வான்வெளி நிறுவனங்களுக்கு சிறந்த இடமாக உள்ளதை எடுத்துரைத்தோம். தமிழகத்தை வான்வெளி, பாதுகாப்பு துறையில் முன்னணியில் நிலைநிறுத்த அரசு உறுதியாக செயல்பட்டு வருகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ