உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மீண்டும் லாபம் ஈட்டியது தமிழக சிமென்ட்ஸ் நிறுவனம்

மீண்டும் லாபம் ஈட்டியது தமிழக சிமென்ட்ஸ் நிறுவனம்

சென்னை:தமிழக அரசின், 'டான்செம்' எனப்படும் தமிழக சிமென்ட்ஸ் நிறுவனம், கடந்த ஆண்டில், 33 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்தது. இந்த நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில், 35 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது.

அரியலுார் மாவட்டத்தில் ஆண்டுக்கு, 16.30 லட்சம் டன் மற்றும் விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில், 3.96 லட்சம் டன் உற்பத்தித்திறனில், தமிழக அரசின் சிமென்ட்ஸ் நிறுவனத்துக்கு, சிமென்ட் உற்பத்தி ஆலைகள் உள்ளன. இந்நிறுவனம், வெளிச்சந்தையில், 'வலிமை' பிராண்டிலும், அரசு துறைகளின் கட்டுமான பணிக்கு, 'அரசு' பிராண்டிலும் சிமென்ட் விற்பனை செய்கிறது. தனியார் நிறுவனங்களின் சிமென்டை விட, அரசு நிறுவனத்தின் சிமென்ட் விலை குறைவாக உள்ளது. எனவே, இந்நிறுவனம் வெளிச்சந்தையில் சிமென்ட் விலை உயர்வை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழக சிமென்ட்ஸ் நிறுவனம், கடந்த, 2023 - 24ல், 83.28 கோடி ரூபாயை லாபமாக ஈட்டிய நிலையில், 2024 - 25ல், 33.18 கோடி ரூபாய் இழப்பை சந்தித்தது. இதற்கு, அந்த ஆண்டில் சிமென்ட் விற்பனையில் பெரிய அளவில் செயல்படும் சில தனியார் நிறுவனங்கள், தங்களுக்குள் கூட்டணி அமைத்து, சிமென்ட் விலையை திடீரென குறைத்து விட்டதால், அந்நிறுவனங்களின் சிமென்ட் விற்பனை அதிகரித்ததே முக்கிய காரணம் என, தெரியவந்துள்ளது. இந்த நிதியாண்டில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை உட்பட பல்வேறு அரசு துறைகளுக்கான சிமென்ட் தேவை அதிகரித்துள்ளது. அதற்கு ஏற்ப அரசு நிறுவனத்திடம் சிமென்ட் வாங்கி வருகின்றன. இதனால், இந்நிறுவனம் இந்த நிதியாண்டில் மீண்டும் லாபத்தை ஈட்ட துவங்கியுள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரலில், 2.62 கோடி ரூபாய், மே, 6.44 கோடி ரூபாய், ஜூனில், 10.12 கோடி ரூபாய், ஜூலையில், 8.64 கோடி ரூபாய், ஆக., 8 கோடி ரூபாய் என, ஐந்து மாதங்களில், 35.84 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. ஆண்டு வாரியாக லாபம், நஷ்ட விபரம் ஆண்டு - லாபம்/ ரூபாய் கோடியில் 2021/ 22 - 117.62 2022/ 23 - 133.97 2023/ 24 - 83.28 2024/ 25 - 33.18 இழப்பு 2025/ 26 ஏப்., முதல் ஆக., வரை - 35.84 *


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ