ஊழியர்கள் மீண்டும் போராட்ட அறிவிப்பு சமரச முயற்சியில் தமிழக அரசு அதிகாரிகள்
சென்னை:நிர்வாகத்தின் பழிவாங்கும் போக்கை கண்டித்து, 'சாம்சங்' நிறுவன ஊழியர்கள் ஆலைக்கு உள்ளே, நாளை உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர். நிர்வாகம் மற்றும் ஊழியர்கள் இடையே சமரச முயற்சியில், தமிழக அரசின் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம், சுங்குவார்சத்திரத்தில், சாம்சங் நிறுவன தொழிற்சாலை உள்ளது. அங்கு பணிபுரியும் ஊழியர்களில் ஒரு பிரிவினர் சி.ஐ.டி.யு., சங்கத்தை அங்கீகாரம் செய்வது உள்ளிட்ட, ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 9 முதல் வேலைநிறுத்தப் போராட்டம் செய்தனர். முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் பேரில், அமைச்சர்கள் வேலு, அன்பரசன், கணேசன், ராஜா ஆகியோர், ஊழியர்கள் மற்றும் நிர்வாக தரப்புடன் நடத்திய பேச்சில், அக்., இறுதியில் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.இதுதொடர்பாக, அரசு விடுத்த செய்திக்குறிப்பில், 'வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள், மீண்டும் பணிக்கு திரும்பும் போது, நிர்வாகம் எவ்வித பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று கூறப்பட்டது.வேலைநிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்பும் ஊழியர்கள், நிர்வாகத்துக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். நிர்வாகத்திற்கு எதிராக எவ்வித நடவடிக்கையிலும் அவர்கள் ஈடுபடக் கூடாது' என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களில் பலருக்கு, ஏற்கனவே பணியாற்றிய வேலை வழங்கப்படவில்லை என்றும், 40க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு நிர்வாகம் எச்சரிக்கை நோட்டீஸ் அளித்து இருப்பதாகவும், ஊழியர்களில் ஒரு பிரிவினர் புகார் தெரிவித்துள்ளனர். நிர்வாகத்தின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாளை தொழிற்சாலை வளாகத்திற்கு உள்ளேயே உண்ணாவிரதம் இருக்கப் போவதாக, சி.ஐ.டி.யு., ஆதரவு ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்னைக்கு, ஆரம்பத்திலேயே தீர்வு காணும் வகையில், நிர்வாகம் மற்றும் ஊழியர்களை சமாதானப்படுத்தும் முயற்சியில் அரசு அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.