அன்னிய நேரடி முதலீட்டு வாய்ப்பை தமிழகம் சரியாக பயன்படுத்துகிறது
புதுடில்லி:சீனாவில் மட்டும் முதலீட்டை தவிர்க்கும் முதலீட்டாளர்களால், தமிழகம் உட்பட இந்திய மாநிலங்களுக்கு அதிக வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். தமிழகம் இதை சரியாக பயன்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.டில்லியில், நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியதாவது:உலக மதிப்புக்கான தொடரில், இந்திய நிறுவனங்கள் தங்களை இணைத்துக் கொள்ளாததே, அன்னிய நேரடி முதலீடு அதிகம் வராமல் இருக்கக் காரணம். சீனா, தைவான், வியட்நாம் ஆகிய நாடுகள் அளவுக்கு இந்தியா முதலீடுகளை பெறாமல் போக, இது முக்கிய காரணமாக உள்ளது. இதனால், நம் ஏற்றுமதியும், தொழிலாளர்கள் அதிகமுள்ள துறைகளும் பாதிக்கப்படுகின்றன. தற்போது சில நாடுகள், பெருநிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள், சீனாவில் மட்டும் முதலீடே செய்வதில்லை என்ற மனநிலைக்கு வந்திருப்பதால், அன்னிய நேரடி முதலீட்டை பெறுவதற்கான சாதகமான சூழல் இந்தியாவுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அதை சரியாகப் பயன்படுத்திக் கொள்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.மத்திய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்ரமணியம், தமிழக அரசு கடந்த 2021ல் நியமித்த மாநில பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஐந்து உறுப்பினர்களில் ஒருவராக நியமிக்கப்பட்டவர்.
'சீனா பிளஸ் ஒன்'
சர்வதேச நிறுவனங்கள், சீனாவில் மட்டுமே முதலீடு செய்வதை மாற்றி, வேறு நாட்டிலும் முதலீடுகளை மேற்கொள்வதை, 'சீனா பிளஸ் ஒன்' என்கின்றனர். இது 'பிளஸ் ஒன்' மற்றும் 'சி பிளஸ் ஒன்' என்ற வார்த்தைகளிலும் குறிப்பிடப்படுகிறது.