தேயிலை துாள் உற்பத்தி 10.88 கோடி கிலோ குறைவு காலநிலை மாற்றத்தால் பாதிப்பு
குன்னுார்:நம் நாட்டில் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால், தேயிலை துாள் உற்பத்தி கடந்த ஆண்டில் தேசிய அளவில், 10.88 கோடி கிலோ குறைந்துள்ளது. மேற்கு வங்க தலைநகர் கோல்கட்டாவை தலைமையிடமாக கொண்ட தேயிலை வாரியம், நீலகிரி மாவட்டம் குன்னுாரில் செயல்பட்டு வருகிறது. தேயிலை வாரிய புள்ளி விபரங்கள் அடிப்படையில், 2023ம் ஆண்டை விட கடந்த ஆண்டில் தேயிலை துாள் உற்பத்தி குறைந்துள்ளது. 22.68 கோடி கிலோ
நாட்டில் தேயிலை உற்பத்தி 2023ல், 139.36 கோடி கிலோவாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில், 128.48 கோடி கிலோவாக இருந்தது; 10.88 கோடி கிலோ அளவுக்கு உற்பத்தி குறைந்தது. வட மாநிலங்களில், 2023ல் உற்பத்தி, 115.69 கோடி கிலோவாக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 105.79 கோடி கிலோவாக இருந்தது; 9.9 கோடி கிலோ உற்பத்தி குறைந்தது. தென் மாநிலங்களில், 2023ல் உற்பத்தி, 23.66 கோடி கிலோ இருந்த நிலையில், கடந்த ஆண்டு 22.68 கோடி கிலோ உற்பத்தி இருந்தது; 98 லட்சம் கிலோ குறைந்தது. ஏற்றத்தாழ் வு
தமிழகத்தில், 2023ல் உற்பத்தி, 16.74 கோடி கிலோ இருந்த நிலையில், கடந்த ஆண்டு 16.39 கோடி கிலோவாக இருந்தது; 35 லட்சம் கிலோ குறைந்தது.தென்னிந்திய தோட்ட அதிபர்கள் சங்க (உபாசி) பொது செயலர் சஞ்சித் கூறுகையில், “கடந்த ஆண்டு உற்பத்தியில் ஏற்பட்ட ஏற்ற தாழ்வில், ஏப்., முதல் ஜூன் வரையிலும்; ஆக., - நவ., மாதங்களிலும் உற்பத்தி வெகுவாக குறைந்தது. “ஜூலை, அக்., மாதங்களில் உற்பத்தி ஏற்றம் கண்டது. நாடு முழுதும் ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் பசுந்தேயிலை மகசூல் குறைந்து, உற்பத்தியும் தேசிய அளவில் 10.88 கோடி கிலோ வரை குறைந்தது,” என்றார்.2023ல் தேயிலை உற்பத்தி, 139.36 கோடி கிலோவாக இருந்த நிலையில், கடந்த ஆண்டில், 128.48 கோடி கிலோவாக குறைந்தது