| ADDED : நவ 26, 2025 02:01 AM
திருப்பூர்:“பி.எல்.ஐ., - 2.0' திட்டத்தால், செயற்கை நுாலிழை ஆடைகளுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது,” என, மத்திய ஜவுளித்துறை உதவி செயலர் பாஸ் கர் கல்ரா பேசினார். மத்திய அரசின் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டத்தில் - பி.எல்.ஐ., தேவையான திருத்தங்களை செய்து, சீரமைக்கப்பட்ட 'பி.எல்.ஐ., - 2.0' திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் குறித்த வழிகாட்டி கருத்தரங்கு, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது. அதில், மத்திய ஜவுளித்துறை உதவி கமிஷனர் பாஸ்கர் கல்ரா பேசியதாவது: இந்தியாவில், 65 சதவீதம் பருத்தி ஆடை, 35 சதவீதம் செயற்கை நுாலிழை ஆடை உற்பத்தி நடந்து வருகிறது. சர்வதேச சந்தைகளில், செயற்கை நுாலிழை ஆடைகளுக்கான எதிர்பார்ப்பு அதிகமாகவும், பருத்தி ஆடைகளின் தேவை குறைவாகவும் இருக்கிறது. இந்தியாவில் உற்பத்தியாகும் செயற்கை நுாலிழை ஆடைகளுக்கு பிரகாசமான எதிர்காலம் உள்ளது. உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு திட்டம், தொழில்துறையினர் வசதிக்காக திருத்தி அமைக்கப்பட்டுள்ளது. முதலீட்டு வரம்பு 300 கோடி ரூபாய் என்பது 100 கோடியாகவும், 150 கோடி ரூபாய் என்பது 50 கோடியாகவும் குறைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக, அதிக நிறுவனங்கள் இத்திட்டத்தின் வாயிலாக துவக்கப்பட வாய்ப்புள்ளது. உற்பத்தி பொருட்கள் பட்டியலில், 225 வர்த்தக குறியீட்டு எண்கள் உள்ளன. புதிய திட்டத்தில், 17 புதிய வர்த்தக குறியீடுகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதிகரிக்கும் வர்த்தக பரிவர்த்தனை வரம்பு, 25 சதவீதம் என்பது 10 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய திட்டத்தால், நெசவு உள்ளிட்ட ஜவுளித்தொழில் அதிகம் பயன்பெறும். இவ்வாறு அவர் பேசினார்.