தஞ்சாவூர் மினி டைடல் பார்க் திறந்து 15 தினங்களில் ஹவுஸ்புல்
சென்னை:தஞ்சையில் துவக்கப்பட்ட 'டைடல் பார்க்' கட்டடத்தில் உள்ள அலுவலகங்கள், 15 நாட்களில் நான்கு நிறுவனங்களால் முழுதுமாக நிரம்பிஉள்ளது. தமிழக அரசு, தகவல் தொழில்நுட்பத் துறை வேலைவாய்ப்பை மாநிலம் முழுதும் உருவாக்கும் வகையில், சென்னை தரமணியில் இருப்பது போல், சிறிய நகரங்களிலும், 'டைடல் பார்க்' கட்டடம் கட்டி வருகிறது.தஞ்சை மாவட்டம், பிள்ளையார்பட்டியில், 30 கோடி ரூபாய் செலவில், 55,000 சதுர அடியில் தரைதளம் மற்றும் மூன்று தளங்களுடன் கட்டப்பட்டுள்ள, 'மினி டைடல் பார்க்' கட்டடதை முதல்வர் ஸ்டாலின் செப்., 23ல் துவக்கி வைத்தார். துவங்கியதிலிருந்து 15 தினங்களுக்குள், டைடல் பார்க் வளாகத்தில் உள்ள அலுவலகங்கள் முழுதுமாக நான்கு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதனால், நேரடியாக, 500 - 600 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, தொழில் துறை அமைச்சர் ராஜாவின் சமூக வலைதளப் பதிவு:தமிழகத்தின் ஒவ்வொரு மூலைக்கும் வளர்ச்சியை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் முயற்சி வெற்றிபெற்று வருகிறது.தஞ்சை டைடல் தற்போது, 100 சதவீதம் நிரம்பியது. முதல்வர் ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றவுடன் இரண்டாம் நிலை நகரங்கள் மற்றும் சிற நகரங்களுக்குள், 'நியோ டைடல்ஸ்' பூங்காக்களை கொண்டு வரும் எண்ணத்தை முன்மொழிந்தார். இதன் வாயிலாக, தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஆழமாக ஊடுருவி, அவரவர் ஊருக்கே வேலைவாய்ப்பை கொண்டு வரும் முயற்சியில் அரசு இறங்கியது. 'டெல்டா பகுதிகளில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் கட்டுவது நல்ல பலனை அளிக்காது, காலியாகவே இருக்கும்' என, பலரும் கூறினர். ஆனால், இன்று, ஸ்டாலின் டைடல் நியோ கட்டடத்தை துவக்கி வைத்து, 15 நாட்களே ஆன நிலையில், ஒட்டுமொத்த, 48,444 சதுர அடி வாடகைக்கு பகிர்ந்த பகுதி முழுதும் நிறுவனங்களால் நிரம்பியது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. தஞ்சை டைடல் பார்க்கில் நிறுவனங்களுக்கான வாடகை கட்டணம் ஒரு சதுர அடிக்கு 35 ரூபாயாக உள்ளது.