தரத்தை மேம்படுத்தும் நோக்கம் நல்லது தான், ஆனால்...?
ச ர்வதேச தரத்துடன் ஒப்பிட்டு, பல ஆண்டுகளாக இந்திய உற்பத்தி பொருட்களின் தரம் குறித்த கேள்விகள் எழுந்தன. இதனால், 'உலகத்தரம் வாய்ந்த' என்ற அடைமொழி பிரபலமாகி, அந்த அடைமொழி பொறித்த பொருட்களையே நுகர்வோர் அதிகம் நாடினர். உண்மையில், உள்நாட்டு சந்தையில் விலை குறைவாக இருப்பதே முன்னுரிமையாக இருந்ததால், நீடித்த தரம் அல்லது செயல்திறன் பின்னுக்கு தள்ளப்பட்டது. ஆனால், சமீபத்திய ஆண்டுகளில் அரசு, 'தரக் கட்டுப்பாட்டு ஆணைகள்' என்ற முறையை பெரிதும் விரிவாக்கியுள்ளது. உருக்கு, பிளாஸ்டிக், மின்னணு சாதனங்கள், பொம்மைகள் போன்ற முக்கிய துறைகள் அனைத்தும் கட்டாய தரச்சான்றிதழின் கீழ் கொண்டு வரப்பட்டன. 2014 வரை 14 ஆணைகள், 106 பொருட்களை மட்டுமே கையாண்ட நிலையில், தற்போது 187க்கும் மேற்பட்ட தரக் கட்டுப்பாட்டு ஆணைகள், 769 பொருட்களை உள்ளடக்கியுள்ளன. கவனம் ஈர்த்த பி.ஐ.எஸ்.,
கடந்த 2017ம் ஆண்டு பி.ஐ.எஸ்., சட்டம் அமல்படுத்தப்பட்ட பின், அரசு பல பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு தரச்சான்றிதழ் கட்டாயம் பெற வேண்டும் என அறிவித்தது. இதன் அடிப்படையில் கதவு கைப்பிடிகள், உருக்கு சமையல் பாத்திரங்கள், மின் சாதனங்கள், நீர் சுத்திகரிப்பு சாதனங்கள் என, வாழ்க்கையின் தேவைக்கான பல்வேறு பொருட்களும் கட்டுப்பாட்டுக்குள் வந்தன. முன்னதாக, பி.ஐ.எஸ்., தர விருப்ப அடிப்படையில் பொருட்கள் தயாரிக்கப்பட்டு இருந்தன. ஆனால் தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் வெளியிடப்பட்ட பின், உள்ளூர் அல்லது வெளிநாட்டு உற்பத்தியாளர்கள் யாராக இருந்தாலும் அவை கட்டாயமாக பின்பற்றப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. அதற்கான ஆய்வுகள், சோதனைகள், சான்றிதழ்கள் அனைத்தும் அவசியமாகின. இதன் நோக்கம் தரமற்ற இறக்குமதிகளைத் தடுக்கவும், உள்நாட்டில் தரமான உற்பத்தியை ஊக்குவிப்பதும் ஆகும். ஊழியர் பற்றாக்குறை
பி.ஐ.எஸ்., அமைப்பில் பணிபுரியும் சுமார் 500 விஞ்ஞானிகளே, 769க்கும் மேற்பட்ட பொருட்களுக்கான உலகளாவிய பரிசோதனைகள் மற்றும் சான்றிதழ்களை கவனிக்கின்றனர். இது, இந்நிறுவனத்தின் திறனை மீறிய வேலைப்பளுவாக உள்ளது. உள்ளூர் உற்பத்தியாளர்களுக்கு ஆன்லைன் விண்ணப்பம், ஓரிரு மாதங்களில் நிறைவேறினாலும், வெளிநாட்டு உற்பத்தியாளர்களுக்கான தரச்சான்றிதழ் திட்டம் சிக்கலானது. அதாவது, 70 - 80 பக்க ஆவணங்கள், நேரடி ஆய்வுகள், 4.75 லட்சம் ரூபாய் வரை கட்டணம், சில மாதங்களுக்குப் பிறகும் சான்றிதழ் கிடைக்காத நிலை என பல சிக்கல்கள் ஏற்படுகின்றன. சோதனை ஆய்வகங்களின் பற்றாக்குறை, பிரச்னையை மேலும் தீவிரப்படுத்துகிறது. நாடு முழுதும், 10 பி.ஐ.எஸ்., ஆய்வகங்கள் மற்றும் சில நுாறு அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகங்களே உள்ளன. உதாரணமாக, மின்சார இயந்திரங்கள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான புதிய விதிமுறைகள் வந்தபின், விண்ணப்பங்கள் மூன்று மாதங்களுக்கு மேல் காத்திருக்கின்றன. எனவே, தேவையான பணியாளர், சோதனைக்கூடங்கள் தற்போதைய அளவை விட இருமடங்கு அதிகம் தேவை. சிறுதொழில்கள் பாதிப்பு
இறக்குமதிக்கான பி.ஐ.எஸ்., சான்றிதழ் கட்டாயம் என்பதால், சான்றிதழ் தாமதமானால் சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் மூலப்பொருட்களை பெற முடியாமல் சிக்கிக் கொள்கின்றன. உருக்குத் துறையில் தரச்சான்றிதழ் கிடைக்காததால், சிறந்த மற்றும் மலிவு விலை பொருட்களை வெளிநாடுகளில் இருந்து பெற முடியவில்லை. இதனால் சிறு தொழில்கள் உற்பத்தியை குறைக்கவோ, செலவை கூடுதலாக்கவோ நேர்கிறது. இதனால், ஏற்றுமதி நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் போட்டியிழக்கும் அபாயம் உள்ளது. விலக்கு தேவை
தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் வாயிலாக தரத்தை மேம்படுத்தும் நோக்கம் நல்லது தான். ஆனால், தேவையான பணித்திறன், விஞ்ஞானிகள் இல்லாமல், விதிமுறைகள் மட்டும் அதிகரிப்பதால் பல்வேறு தடைகள் உருவாகின்றன. எல்லா துறைகளிலும் தரக் கட்டுப்பாட்டு ஆணைகளை ஒரே மாதிரியாக கட்டாயப்படுத்துவதற்கு பதிலாக, எந்த துறைகளில் அவசியம் என்பதை சந்தை தான் தீர்மானிக்க முடியும் என்பதை புரிந்து, அரசு விலக்களிக்க வேண்டும். தரத்தை உறுதிபடுத்தும் போது தொழில்கள் தடையின்றி செயல்படவும், ஏற்றுமதி போட்டித்திறனை காக்கவும், பி.ஐ.எஸ்., அமைப்பின் திறனை விரிவுபடுத்துவது அவசியம். இல்லையெனில், உலகத்தரத்தை எட்டுவதற்கான இந்தியாவின் புரட்சிகரமான முயற்சி, தன் இலக்குகளை அடைய முடியாமல் போகும் அபாயம் உள்ளது. தரக் கட்டுப்பாட்டு ஆணைகள் வாயிலாக, தரத்தை மேம்படுத்தும் நோக்கம் நல்லது தான். ஆனால், தேவையான வசதிகள், விஞ்ஞானிகள் இல்லாமல், விதிமுறைகளை மட்டும் அதிகரிப்பதால் என்ன பயன் கிடைத்துவிடும்?