நவீன இயந்திரம் வாங்க டப் திட்டம் பின்னலாடை துறையினர் எதிர்பார்ப்பு
திருப்பூர்,:உற்பத்தி திறனை மேம்படுத்த உதவியாக, 'டப்' எனப்படும் தொழில்நுட்ப மேம்பாட்டு நிதி திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, ஜவுளித்துறையினர் எதிர்பார்க்கின்றனர். ஜவுளித்தொழில் மேம்பாட்டுக்கு, புதிய தொழில்நுட்ப இயந்திர பயன்பாடு முக்கியம் என்பதால், 2016ல் டப் திட்டத்தை அரசு அறிவித்தது. வெளிநாடுகளில் இருந்து புதிய தொழில்நுட்ப இயந்திரம் இறக்குமதி செய்யும் போது, மதிப்பீட்டில் 15 சதவீதம் வரை ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. இத்திட்டத்தை திருத்தம் செய்து 'ஏ-டப்' என்ற பெயரில், 2022 மார்ச் வரை செயல்படுத்தப்பட்டது; பின், இத்திட்டத்தை தொடரவில்லை. தற்போது, இந்தியா - பிரிட்டன் இடையே, வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகி, விரைவில் அமலுக்கு வர உள்ளது. வரும் டிச., மாதத்துக்குள், 27 நாடுகளை கொண்ட ஐரோப்பிய யூனியன் நாடுகளுடன், வரியில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாக வாய்ப்புள்ளது. வர்த்தக ஒப்பந்தங்கள் வாயிலாக, கூடுதல் ஆர்டர் வந்தாலும், உற்பத்தியை முடித்து, ஆடைகளை அனுப்பி வைக்க வேண்டும். இல்லாவிடில், இந்தியாவுக்கு வரவேண்டிய ஆர்டர்கள் வேறு நாடுகளுக்கு சென்றுவிடும். டப் திட்டத்தை மீண்டும் செயல்படுத்தினால் மட்டுமே, ஜவுளி உற்பத்தி திறனை மேம்படுத்த முடியும் என தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர். பின்னலாடை ஏற்றுமதியாளர்கள் கூறுகையில், 'புதிய ஆர்டர்கள் அதிகம் வரும் என்பதால், உற்பத்தி திறனை மேம்படுத்தி, தயாராக இருக்க வேண்டும். அதற்காக, புதிய தொழில்நுட்ப இயந்திர இறக்குமதி அவசியமாகிறது. 'குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு மட்டும், டப் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த, மத்திய ஜவுளித்துறை அமைச்சகம் முன்வர வேண்டும்' என்றனர்.