புதிய நுட்பம்(Tag)
பேட்டரியின் செயல்திறனை நீட்டிக்க ‘ராக்சால்ட்’ லித்தியம் பேட்டரிகளுக்கு மாற்றாக உருவாகும் சோடியம் பேட்டரிகள், நீண்ட காலம் செயல்திறனை தக்கவைக்கும் வாய்ப்பு அதிகரித்துள்ளது. இதற்கான புதிய தொழில்நுட்பத்தை சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். புதிய கண்டுபிடிப்பு சாதாரண வெப்பநிலையில் இயங்கும் சோடியம் – கந்தக பேட்டரிகளுக்காக, 'ராக்சால்ட் ஹை என்ட்ரோபி ஆக்சைடு' என்ற புதிய இடை அடுக்குப் பொருள் உருவாக்கப்பட்டுள்ளது. பேட்டரிக்குள் ஏற்படும் தேவையற்ற வேதியியல் மாற்றங்களை கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். தொழில்நுட்பத்தின் சிறப்பு பேட்டரியின் மின்சேமிப்பு திறன் விரைவாக குறைவதை கட்டுப்படுத்தவும், அதன் செயல்திறனை நீண்ட காலம் தக்கவைக்கவும் இந்த பொருள் உதவும் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. அடுத்த கட்டம் எதிர்கால மின்சேமிப்பு சாதனங்கள் மற்றும் பேட்டரி உற்பத்தியில் இந்த தொழில்நுட்பம் பயன்படும் வாய்ப்புள்ளது. எனினும், வணிக ரீதியிலான உற்பத்திக்கு கூடுதல் சோதனைகள் தேவை. ஆராய்ச்சி: சென்னை ஐ.ஐ.டி., சாயக்கழிவுநீரை சுத்திகரிக்க நானோ தொழில்நுட்பம் ஜவுளி தொழிற்சாலைகளில் உருவாகும் சாயக்கழிவுநீரை சுத்திகரிப்பது பெரும் சவாலாக உள்ளது. குறிப்பாக, கழிவுநீரில் கலந்துள்ள சாய நிறமிகளை அகற்றுவதற்கு புதிய வாய்ப்பை இந்திய ஆராய்ச்சியாளர்களின் கண்டுபிடிப்பு ஏற்படுத்தியுள்ளது. புதிய கண்டுபிடிப்பு இயற்கையில் மக்கும் நுண்ணிழைகளுடன், ஜிங்க் ஆக்சைடு நுண்துகள்களை இணைத்து புதிய வடிகட்டி உருவாக்கப்பட்டுள்ளது. கழிவுநீரில் உள்ள குறிப்பிட்ட சாய நிறமிகளை சிதைப்பதற்கு இந்த தொழில்நுட்பம் உதவுகிறது. ஆய்வகத்தில் கிடைத்த பலன் 120 நிமிட ஆய்வக சோதனையில், இரண்டு வகை சாயங்களின் நிறத்தன்மை முறையே 98.6 மற்றும் 96.7 சதவீதம் குறைந்துள்ளது. அடுத்த கட்டம் திருப்பூர் போன்ற ஜவுளி உற்பத்தி மையங்களில், எதிர்கால கழிவுநீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பமாக பயன்படும் வாய்ப்புள்ளது. ஆராய்ச்சி: நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம், மொஹாலி