மாவட்டந்தோறும் டைடல் பார்க்: அரசு முடிவு
சென்னை: அனைத்து மாவட்டங்களிலும் டைடல் பார்க் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. தமிழக அரசின், 'டிட்கோ' எனப்படும் தமிழக தொழில் வளர்ச்சி நிறுவனமும், 'எல்காட்' எனப்படும் தமிழக மின்னணுவியல் கழகமும் இணைந்து, சென்னை தரமணியில், கடந்த 2000ல் டைடல் பார்க்கை ஏற்படுத்தின. இதனால், ஐ.டி., வேலைவாய்ப்புகள் பெருகின. இதையடுத்து, தமிழகம் முழுதும், இரண்டாம் நிலை நகரங்களில், 50,000 சதுர அடி முதல், 1 லட்சம் சதுர அடியில், மினி டைடல் பார்க்குகளைக் கட்ட அரசு முடிவு செய்தது. அதன்படி பல மாவட்டங்களில் டைடல் பார்க்குகள் கட்டப்பட்டு செயல்படுகின்றன. மேலும் சில மாவட்டங்களில் பணிகள் நடைபெறுகின்றன. நேற்று முன்தினம் திருப்பூரில் அமைக்கப்பட்டிருக்கும் டைடல் பார்க்கை, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். இந்நிலையில், அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு டைடல் பார்க் அமைக்க அரசு முடிவு செய்துள்ளது.