உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / வர்த்தக துளிகள்

வர்த்தக துளிகள்

துருக்கி, அஜர்பைஜான் செல்லாதீர்சுற்றுலா நிறுவனங்கள் அறிவுறுத்தல்

இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் நிலவி வரும் நிலையில், இந்தியாவைச் சேர்ந்த பல்வேறு சுற்றுலா பயண சேவை நிறுவனங்களும் துருக்கி, அஜர்பைஜான், உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு செல்வதற்கான பயண முன்பதிவுகளை தற்காலிகமாக நிறுத்தி வைத்துஉள்ளன. ஈஸ் மை டிரிப், காக்ஸ் அண்டு கிங்ஸ், டிராவோமின்ட் ஆகிய நிறுவனங்கள், இந்நாடுகளுக்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்குமாறு இந்தியர்களை அறிவுறுத்தியுள்ளன. தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே பயணம் மேற்கொள்ளவும், மற்றபடி நிலைமை சீரடையும் வரை காத்திருக்கவும் பயனர்களை கேட்டுக் கொண்டுள்ளன. இந்தியாவின் 'ஆப்பரேஷன் சிந்துார்'ஐ எதிர்த்து பாகிஸ்தானுக்கு ஆதரவளிப்பதாக துருக்கியும், அஜர்பைஜானும் அறிவித்திருந்தன.

ஹையர் இந்தியாவை வாங்கசுனில் மிட்டல் ஆர்வம்

ஹையர் இந்தியா நிறுவனத்தின் 49 சதவீத பங்குகளை வாங்க, பார்தி ஏர்டெல் நிறுவனர் சுனில் மிட்டல் பேச்சு நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. சீன நிறுவனமான ஹையர், பிரிஜ் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இதன் இந்திய வணிகத்தின் 49 சதவீத பங்குகளை, அமெரிக்காவைச் சேர்ந்த தனியார் முதலீட்டு நிறுவனமான 'வார்பர்க் பின்கஸ்' உடன் இணைந்து, கிட்டத்தட்ட 17,000 கோடி ரூபாய்க்கு சுனில் மிட்டல் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. எனினும், ஹையர் இதுகுறித்து இன்னும் முடிவு செய்யவில்லை என்றும், வேறு பிற நிறுவனங்களும் ஆர்வம் காட்டலாம் என்பதால், காத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹையர் அதன் இந்திய வணிகத்தின் குறிப்பிட்ட சதவீத பங்குகளை விற்பனை செய்வது தொடர்பாக ஆலோசித்து வருவதாக, கடந்தாண்டு அக்டோபரில் தகவல் வெளியானது.

சோலார் கண்ணாடி இறக்குமதி சீனா, வியட்நாம் மீது வரி விதிப்பு

சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட சில வகை சோலார் கண்ணாடிகளின் மீது, ஐந்து ஆண்டுகளுக்கு பொருள் குவிப்பு தடுப்பு வரி விதிக்கப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே கடந்தாண்டு டிசம்பர் மாதம் முதல் தற்காலிக வரி விதிப்பு அமலில் உள்ளது. சோலார் பேனல்களில் அதிகம் பயன்படுத்தப்படும் இந்த சோலார் கண்ணாடிகளின் இறக்குமதிகளின் மீது, டன் ஒன்றுக்கு அதிகபட்சமாக 664 டாலர் அதாவது, 56,440 ரூபாய் வரை வரி விதிக்கப்படுவதாக, மத்திய வர்த்தகத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த நாடுகளில் இருந்து குறைந்த விலை இறக்குமதிகள் கணிசமாக அதிகரித்துள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளதாகவும், எனவே இதை கட்டுப்படுத்தி, உள்நாட்டு தொழில்துறையினரின் நலன்களை காக்க, இந்த முடிவு எடுக்கப்பட்டுஉள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை