உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / அரசு ஆதரவளிக்க தவறினால் அடுத்த ஆண்டில் சேவை முடங்கும் தொலைத்தொடர்பு துறைக்கு வோடபோன் ஐடியா கடிதம்

அரசு ஆதரவளிக்க தவறினால் அடுத்த ஆண்டில் சேவை முடங்கும் தொலைத்தொடர்பு துறைக்கு வோடபோன் ஐடியா கடிதம்

புதுடில்லி:ஸ்பெக்ட்ரம் பயன்பாட்டு நிலுவையை சமாளிக்க, அரசின் ஆதரவு இல்லை என்றால், 2026ம் நிதியாண்டுக்குப் பின் செயல்பட முடியாத நிலை ஏற்படும் என, வோடபோன் ஐடியா நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏ.ஜி.ஆர்., எனப்படும் சரிசெய்யப்பட்ட மொத்த வருவாயில், அரசுக்கு சேர வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்துவதில் வோடபோன் ஐடியா நிறுவனம் சிக்கலை சந்தித்து வருகிறது. 30,000 கோடி ரூபாய் பாக்கியை அரசு தள்ளுபடி செய்ய உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனுவை தாக்கல் செய்ததையடுத்து, இம்மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்நிலையில், மத்திய தொலைத்தொடர்புத் துறைக்கு இந்நிறுவனம் கடிதம் எழுதியுள்ளது. வங்கிகளிடம் இருந்து கடன் கிடைக்காமல், திட்டமிட்ட முதலீடுகளை செய்ய இயலாது என அதில் தெரிவித்துள்ளது. இதனால், கடந்த 12 மாதங்களில் மேற்கொள்ளப்பட்ட நிதி திரட்டலும், நிறுவனம் இதுவரை செய்த முதலீடும், சமீபத்தில் பாக்கி தொகையில் ஒரு பகுதியை பங்குகளாக மாற்றிக்கொண்ட அரசாங்கத்தின் பங்கும் மதிப்பிழக்கும் என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நெருக்கடி தீர, அரசு உதவி செய்யாவிட்டால், நிலுவைத் தொகையால் என்.சி.எல்.டி., எனப்படும் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்துக்கு நிறுவனம் செல்ல வேண்டியிருக்கும் எனவும் வோடபோன் ஐடியா தெரிவித்துள்ளது. இதனால், நெட்வொர்க் மற்றும் ஸ்பெக்ட்ரம் சொத்துக்களின் சேவை குறுகிய காலத்தில் தடைபட நேர்ந்தால், கிட்டத்தட்ட 2 கோடி வாடிக்கையாளர்கள், பாதிக்கப்படுவார்கள் என்றும் கடிதத்தில் தெரிவித்துள்ளது. அரசின் சரியான ஆதரவு கிடைக்கவில்லை என்றால், நடப்பு 2026ம் நிதியாண்டுக்குப் பின் செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டு, 30,000 நேரடி மற்றும் மறைமுகப் பணியாளர்கள் பாதிக்கப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஏர்டெல் மீண்டும் மனு

ஸ்பெக்ட்ரம் மற்றும் வருவாயில் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை விவகாரத்தில், வோடபோன் ஐடியாவைத் தொடர்ந்து, ஏர்டெல் நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. ஏ.ஜி.ஆர்., நிலுவைத் தொகை, தங்கள் தொலைத்தொடர்பு சேவை வழங்கும் நடைமுறையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துவதாகவும் நெட்வொர்க் விரிவாக்கப் பணிகளில் ஈடுபட முடியாத தடையை ஏற்படுத்துவதாகவும், ஏர்டெல் தனது மனுவில் கூறியுள்ளது. தொலைத்தொடர்புத் துறையில் அதிகரித்து வரும் போட்டியைச் சமாளிக்க வேண்டிய சூழலில், நிதி நெருக்கடியில் தவிப்பதாகவும், நிலுவையை தள்ளுபடி செய்ய முன்வராவிட்டால், பார்தி ஏர்டெல் நிறுவனம் மட்டுமின்றி, ஒட்டுமொத்த தொலைத்தொடர்புத் துறையின் எதிர்காலமே கேள்விக்குறியாகும் என்றும், உச்ச நீதிமன்றத்தில் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை