உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / பொது / மியூச்சுவல் பண்டு மூடப்பட்டால் பணம் பாதுகாப்பாக இருக்குமா?

மியூச்சுவல் பண்டு மூடப்பட்டால் பணம் பாதுகாப்பாக இருக்குமா?

மியூச்சுவல் பண்ட் முதலீடுகள் சந்தை அபாயத்திற்கு உட்பட்டவை என்று சொல்லப்படுவதை நீங்கள் அறிந்திருக்கலாம். சந்தை ஏற்ற இறக்கத்திற்கு ஏற்ப, நிதிகள் பலன் அளிக்கும். அதனால் தான் நீண்ட கால நோக்கிலான முதலீட்டில் ஏற்ற இறக்கத்தின் தாக்கத்தை எதிர்கொள்ளலாம் என்கின்றனர். எல்லாம் சரி, எதிர்பாராத பிரச்னை காரணமாக மியூச்சுவல் பண்ட் நிறுவனம் மூடப்படும் நிலை ஏற்பட்டால் முதலீட்டாளர்கள் பணம் என்ன ஆகும்? இந்த சந்தேகம் இயல்பாக எழக்கூடியது என்றாலும் மியூச்சுவல் பண்ட் செயல்பாட்டு அமைப்பில் இதற்கான பாதுகாப்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்வது அவசியம்.

டிரஸ்ட் அமைப்பு:

மியூச்சுவல் பண்ட் என்பது முதலீட்டாளர்கள் சார்பில் பணத்தை திரட்டி முதலீடு செய்து பலனை பிரித்தளிக்கும் தன்மை கொண்டது. மியூச்சுவல் பண்டு துவங்கும் நிறுவனம், சுயேட்சை இயக்குநர்கள் கொண்ட டிரஸ்ட் அமைப்பை தனியே ஏற்படுத்த வேண்டும். இந்த டிரஸ்ட் மூலமே பணத்தை கையாள வேண்டும்.

பணம் பாதுகாப்பு:

முதலீட்டாளர்களின் பணம் மியூச்சுவல் பண்ட் நிறுவன கணக்கிற்கு செல்லாது. அதன் சார்பிலான டிரஸ்ட் கணக்கிலேயே இருக்கும். இந்த டிரஸ்ட் செயல்பாட்டிற்கு தெளிவான விதிமுறைகள் உள்ளன. எனவே, எதிர்பாராத காரணங்களால் நிறுவனம் மூடப்பட்டாலும் டிரஸ்ட் தொடரும். பணம் பாதுகாப்பாகவே இருக்கும்.

செபி கண்காணிப்பு:

மியூச்சுவல் பண்ட் செயல்பாடுகளை பங்குச்சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான செபி கண்காணித்துக்கொண்டு இருக்கும். செபி அனுமதி இல்லாமல் நிறுவனம் அல்லது அதன் சார்பிலான நிதிகளை மூட முடியாது. மூடுவதற்கு முன் முதலீட்டாளர்களுக்கு தகவல் தெரிவித்து பணத்தை விலக்கி கொள்ள அவகாசம் அளிக்க வேண்டும்.

நிதிகள் மூடல்:

சில அரிதான தருணங்களில் குறிப்பிட்ட நிதிகள் மட்டும் மூடப்படலாம். அத்தகைய சூழ்நிலையில், நிதியின் முதலீடுகள் அப்படியே இருக்கும். பத்திரங்கள், பங்குகள் வடிவிலான முதலீடுகள் விற்கப்பட்டு, பணம் முதலீட்டாளர்களிடம் அளிக்கப்படும். இந்த செயல்முறைக்கு காலம் ஆகலாம் என்றாலும் பணம் வரும்.

விரிவாக்கம் தேவை:

மியூச்சுவல் பண்ட் செயல்படும் விதம் தொடர்பான அடிப்படை அம்சங்களை தெரிந்து கொள்வது நல்லது. இது விழிப்புணர்வுக்கு வழிவகுக்கும். ஏதேனும் நெருக்கடி என்றால் பதற்றம் தேவையில்லை. மியூச்சுவல் பண்ட் முதலீட்டை பரவலாக முதலீடு செய்வது விரிவாக்கத்தின் பலனை அளிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை