யு.பி.ஐ., பரிவர்த்தனைக்கு பயோமெட்ரிக் வசதி
இந்தியாவில் யு.பி.ஐ., பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, பயோமெட்ரிக் மற்றும் முக அங்கீகார வசதிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக, தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆதார் அடையாள அட்டையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள கைரேகையை கொண்டு பரிவர்த்தனைகள் சரிபார்க்கப்படும் என அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன. இது நடைமுறைபடுத்தப்படும் பட்சத்தில், இனி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, பாஸ்வேர்டு மற்றும் பின் நம்பர் மட்டுமல்லாது, இந்த கூடுதல் வசதிகளையும் தேர்வு செய்து, பயன்படுத்தி கொள்ளலாம். மும்பையில் நடைபெற்று வரும் 'குளோபல் பின்டெக் பெஸ்ட்டிவல்' நிகழ்ச்சியில் என்.பி.சி.ஐ., அமைப்பு இந்த வசதியை காட்சிப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் நோக்கில், சமீபத்தில் புதிய வழிகாட்டுதல்களை வெளியிட்டது. இதன்படி, தற்போது பரவலாக பயன்படுத்தப்படும் எஸ்.எம்.எஸ்., வாயிலான ஓ.டி.பி., நடைமுறையை தாண்டி, புதிய அங்கீகார வழிமுறைகளை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. எனவே, வங்கிகள், பேமென்ட் சேவை வழங்குநர்கள் மற்றும் நிதி தொழில்நுட்ப நிறுவனங்கள் ஆகியவை, ஓ.டி.பி.,க்கு மாற்றாகவோ அல்லது அதனுடன் சேர்த்தோ, பயோமெட்ரிக் முறைகளை பயன்படுத்தலாம்.