கமாடிட்டி: தங்கத்தை ஏத்தியாச்சு அடுத்தது செம்புதானா?
தங்கத்தை ஏத்தியாச்சு அடுத்தது செம்புதானா?
ல ண்டன் பொருள் வாணிப சந்தையில், செம்பு விலை, கடந்த இரு நாட்களில் கிட்டத்தட்ட 560 அமெரிக்க டாலர் அதிகரித்து, 1 டன் 10,500 டாலராக உயர்ந்தது. சந்தையில் தேவைக்கு ஏற்ப கனிமம் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக, விலை உயர்ந்து வருகிறது. கடந்த ஆண்டு மே மாதத்தில், வரலாற்று உச்ச விலையாக 1 டன் 10,925 அமெரிக்க டாலரை எட்டியது குறிப்பிடத்தக்கது. இந்தோனேஷியாவின் செம்பு உற்பத்தி சுரங்கமான, 'ப்ரீபோர்ட் -மெக்மோரான்' நிறுவனத்தின் 'கிராஸ்பெர்க்' சுரங்கம், நிலச்சரிவால் பகுதி அளவில் மூடப்பட்டுள்ளது; மீட்பு நடவடிக்கைகள் இன்னும் நடைபெற்று வருகின்றன. இது, வினியோகம் குறித்த கூடுதல் கவலைகளை ஏற்படுத்தி உள்ளது. சிலி நாட்டின் சுரங்கமான, 'கோடெல்கோ' நிறுவனத்தின் 'எல் டெனியெந்தே' சுரங்கம் ஜூலை மாதத்தில் நிகழ்ந்த சரிவுக்குப் பின் முழுமையான செயல்பாட்டை மீண்டும் துவங்குவதில் தாமதமாகி வருகிறது. பெரு நாட்டின் 'ஹட்பே' நிறுவனத்தின் 'கான்ஸ்டான்சியா' சுரங்கம், அரசியல் போராட்டங்களால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது; இதனால் பிராந்திய உற்பத்தி குறைந்துள்ளது. கே. முருகேஷ் குமார்துணைத்தலைவர்,சாய்ஸ் புரோக்கிங் பிரைவேட் லிமிடெட்