உள்ளூர் செய்திகள்

/ வர்த்தகம் / லாபம் / இன்சூரன்ஸ் வரும்... ஆனா வராது!

இன்சூரன்ஸ் வரும்... ஆனா வராது!

காப்பீடு பற்றி ஒரு பழமொழி உண்டு - 'பெரிய எழுத்துக்களால் கொடுக்கப்பட்டவை, சிறிய எழுத்துக்க ளால் பறிக்கப்படும்'. பழமொழிகள் எளிதில் அழிவதில்லை. ஏனெனில், அவற்றின் உண்மைகள் நிலையானவை. கடந்த வாரம் மீண்டும் இதை அனுபவிக்க நேர்ந்தது. ஒரு விமான டிக்கெட் புக் செய்தேன். அதற்குப் பிறகு “இலவச ரத்து வசதி” கிடைக்க வேண்டும் என்று ஒரு கட்டணம் கூடுதலாக கட்டினேன். இரண்டு நாட்களில் டிக்கெட்டை ரத்து செய்து, மீண்டும் புக் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. அங்குதான் அதிர்ச்சி காத்திருந்தது. ரத்து செய்வதற்கு கட்டணம் வசூலித்தார்கள். அதுவும் டிக்கெட் விலையில் 70 சதவீதத்திற்கும் மேல்! உடனே விமான நிறுவனத்துக்கு மின்னஞ்சல் அனுப்பி, நான் இலவச ரத்து கட்டணம் கட்டியதையும், அது டிக்கெட்டில் தெளிவாக இருந்ததையும் சொன்னேன். பதில் வரவில்லை. பிறகு, “நீங்கள் அந்த ஜீரோ கேன்சலேஷன் ஸ்கீமை தேர்ந்தெடுக்கவே இல்லை” என்று ஒரே அடியாக அடித்தார்கள். நான் சான்று காட்டி, நீண்ட விவாதத்துக்குப் பிறகு, “ஆம், நீங்கள் கட்டியிருக்கிறீர்கள், ஆனால் அது காப்பீடு சம்பந்தப்பட்ட விஷயம், காப்பீடு நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள்” என்று கூறி, கை கழுவி விட்டார்கள். இது ஒரு 'பண்டில்' செய்யப்பட்ட காப்பீடு திட்டம் என்ற உண்மையை அப்போது தான் உணர்ந்தேன். என் தவறு தான், ஆனால் வாங்கும் போது இது தெளிவாக காட்டப்படவில்லை. கால் சென்டரில் இருப்பவர்கள் எவ்வளவு சுழற்றி சுழற்றி பேசுவார்கள் என்று சொல்ல வேண்டியதில்லை. இறுதியில் கண்டுபிடித்த உண்மை என்னவென்றால், காப்பீடு பாலிசியின் சின்ன எழுத்தில் ஜீரோகேன்சலேஷன் வசதி மருத்துவ அவசரங்கள், விபத்து, தனிப்பட்ட இழப்பு போன்ற காரணங்களுக்கே பொருந்தும். சாதாரணமாக, பயணத் திட்டம் மாறியது என்று சொன்னால்? - “தயவுசெய்து மன்னிக்கவும்!” இதுதான் காப்பீட்டு பைன் பிரின்ட். வாடிக்கையாளர்களுக்கு மிகவும் ஏமாற்றத்தையும் கோபத்தையும் தரும் விஷயம். இன்னும் இப்படி பல சம்பவங்கள், பாடங்கள் இருக்கின்றன, மெகா சீரியல் போல! ஜி.எஸ்.டி., விலக்கு மீது ஒரு கண் ஆயுள் மற்றும் தனிநபர் மருத்துவ காப்பீடு பாலிசிகளுக்கு ஜி.எஸ்.டி., விலக்கு அறிவிப்பு வந்ததும் மகிழ்ச்சியோடு பதட்டமும் ஏற்பட்டது. மகிழ்ச்சியான விஷயம் 18 சதவீதம் கூடுதல் செலவு வேண்டாம் என்பது. ஆனால், “அந்த நன்மை முழுமையாக வாடிக்கையாளர்களுக்கு சென்றடையாது” என்ற செய்திகள் சற்று கவலை கொடுத்தது. இந்த நிலையில், மிகப்பெரிய பொதுக் காப்பீட்டு நிறுவனமான 'த நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் கம்பனி லிமிடெட்” அளித்த தெளிவைப் பாராட்ட வேண்டியதே. “வாடிக்கையாளர்களுக்கு முழுமையான ஜி.எஸ்.டி., விலக்கு நன்மை வழங்கப்படும். பிரீமியம் உயர்த்தப்படாது” என்று அவர்கள் தெளிவாக அறிவித்துள்ளனர். எப்போதும் முன்னுதாரணம் காட்டி வரும் இந்த நிறுவனம் போல, மற்ற நிறுவனங்களும் பின்தொடருவார்கள் என்று நம்பலாம். மற்றொரு விஷயம்: ஜி.எஸ்.டி., விலக்கு, ஆயுள் மற்றும் தனிநபர் மருத்துவ காப்பீடு பாலிசிகளுக்கு என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த இரண்டுமே பரந்த பொருளில் பயன்படும் சொற்கள். * ஆயுள் காப்பீடு - யூனிட் லிங்க்டு இன்சூரன்ஸ் பிளான் (யூலிப்: மியுச்சுவல் ஃபண்டு + காப்பீடு இணைந்தது), ஆன்யுட்டி பாலிசி (ஓய்வூதியத்துடன் சேமிப்பு + காப்பீடு இணைந்தது) போன்ற பல வடிவங்களை உட்கொண்டது.* மருத்துவக் காப்பீடு - மருத்துவமனை சிகிச்சை செலவுகள் மட்டும் அல்ல, கிரிட்டிக்கல் இல்னஸ் பாலிசிகள், மேஜர் சர்ஜரி கவர், கேன்சர் கவர், ஹார்ட் சர்ஜிரி கவர் போன்ற ஒரு முறை நிதி வழங்கும் திட்டங்களையும் கொண்டது. இதற்கான துல்லியமான விதிமுறைகள், மற்றும் ஜி.எஸ்.டி., விலக்கின் வரம்புகள் ஆகியவை, விரைவில் வெளிவரும். காத்திருக்கலாம். க.நித்ய கல்யாணிகாப்பீடு குறித்த நிபுணத்துவ எழுத்தாளர், பெருநிறுவன வரலாற்றாசிரியர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ