வாடிக்கையாளர்கள் வெளிநாடுகளுக்கு பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும்போது, வசூலிக்கப்படும் கட்டணங்கள் அனைத்தையும் முன்கூட்டியே அவர்களுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற புதிய வரைவு திட்டத்தை, ரிசர்வ் வங்கி முன்மொழிந்துள்ளது. கல்வி செலவு, சுற்றுலா அல்லது வெளிநாட்டு முதலீடு என எதற்காக பணம் அனுப்பினாலும், வாடிக்கையாளர்களுக்கு பணப்பரிமாற்றம் முடிந்த பிறகே எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது தெரிய வருகிறது.
இதில், பல மறைமுக கட்டணங்கள் இருப்பதால், வாடிக்கையாளர்கள் கூடுதல் சுமையைச் சந்திக்கின்றனர். இதை தவிர்க்கவே இந்த நடவடிக்கை முன்மொழியப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனை செய்வதற்கு முன்னரே இந்த விவரங்களை தெரிவிக்க வேண்டும் என்றும், இறுதி பரிவர்த்தனை முடிந்த பிறகு, வழங்கப்படும் ரசீதிலும் இந்த கட்டணங்கள் தெளிவாகக் குறிப்பிட வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இதனால், வெவ்வேறு வங்கிகள் வசூலிக்கும் கட்டணங்களை ஒப்பிட்டுப் பார்த்து, குறைந்த கட்டணம் உள்ள வங்கியை வாடிக்கையாளர்கள் தேர்ந்தெடுக்கலாம் என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது குறித்து, பொதுமக்கள் மற்றும் நிபுணர்கள் தங்களது கருத்துக்களை வரும் ஜனவரி 9, வரை தெரிவிக்கலாம் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. கல்வி செலவு, சுற்றுலா அல்லது வெளிநாட்டு முதலீடு என எதற்காக பணம் அனுப்பினாலும், தற்போது வாடிக்கையாளர்களுக்கு பணப்பரிமாற்றம் முடிந்த பிறகே எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்பட்டது என்பது தெரிவிக்கப்படுகிறது.
வங்கிகள் வாடிக்கையாளருக்கு தெரிவிக்க வேண்டியவை 1. பயன்படுத்தப்படும் அன்னிய செலாவணி விகிதம் 2. நாணய மாற்று கட்டணங்கள் 3. பணம் அனுப்பும் கட்டணம் 4. இடைத்தரகர் அல்லது வெளிநாட்டு வங்கி கட்டணங்கள் 5. இதர வரிகள் அல்லது சேவை கட்டணங்கள்