டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் எளிதாக பெற வாய்ப்பு
பெ ன்ஷன் மற்றும் பென்ஷன் பெறுவோர் நலத்துறை நாடு முழுதும் 1,600 இடங்களில் 'டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பிரசாரம் 4.0'-வை நவம்பர் மாதத்திலிருந்து துவங்க உள்ளது. டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் என்பது, பென்ஷன் பெறுபவர்கள் ஒவ்வொரு ஆண்டும் தாங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்தவும்; பென்ஷனை தொடர்ந்து பெறவும் சமர்ப்பிக்கும் பாரம்பரிய வாழ்நாள் சான்றிதழின் டிஜிட்டல் வடிவம் ஆகும். முக்கிய அம்சங்கள்
கால அளவு: நவம்பர் 1 முதல் 30 வரை. இடம்: இந்தியா முழுதும் உள்ள 1,600 மாவட்டங்கள் மற்றும் துணைப் பிரிவு தலைமையகங்கள். நோக்கம்: பென்ஷன் பெறுபவர்கள் தங்களின் வாழ்நாள் சான்றிதழ்களை டிஜிட்டல் முறையில் எளிதாகச் சமர்ப்பிக்க உதவுவது. சேவைகள்: வங்கிகள் மற்றும் இந்தியா போஸ்ட் பேமென்ட்ஸ் பேங்க் கிளைகள் வாயிலாக சான்றிதழை சமர்ப்பிக்கலாம். முக அங்கீகார தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வீட்டிலிருந்தே சமர்ப்பிக்கலாம். மிக மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு வீட்டிற்கே சென்று சேவை வழங்கப்படும். முகாம்கள்: பென்ஷன் வழங்கும் வங்கிகள், பென்ஷன் பெறுவோர் நலச் சங்கங்களின் ஆதரவுடன் முகாம்கள் நடத்தப்படும். விழிப்புணர்வு: அக்டோபர் மாதத்தில் சமூக ஊடகங்கள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இலக்கு: 2 கோடி டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ்களைப் பெறுவது. கண்காணிப்பு: அனைத்து சமர்ப்பிப்புகளும் 'டி.எல்.சி., - என்.ஐ.சி., போர்ட்டல் வாயிலாக நிகழ்நேரத்தில் கண்காணிக்கப்படும். கூடுதல் வசதி: 80 வயதுக்கு மேற்பட்ட பென்ஷன்தாரர்கள் அக்டோபர் மாதத்திலேயே சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம்.