பொது துறை வங்கி பங்குகள் ஐந்தாவது ஆண்டாக ஏற்றம்
இந்திய பங்குச் சந்தையில் மற்ற துறைகளை விட, பொதுத் துறை வங்கிகளின் பங்குகள் 2025ம் ஆண்டில் அபார வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. கடந்த ஆண்டில் மட்டும், நிப்டி பொதுத்துறை வங்கி குறியீடு 31 சதவீதம் உயர்ந்து, ஒட்டுமொத்த சந்தையின் வளர்ச்சியையும் விஞ்சியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு முதல், தொடர்ந்து ஐந்து ஆண்டுகளாக பொதுத்துறை வங்கி குறியீடு, 'நிப்டி 50' குறியீட்டை விட அதிக லாபத்தை முதலீட்டாளர்களுக்கு கொடுத்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில், இத்துறை பங்குகள் 2 சதவீதம் வரை உயர்ந்தன. குறிப்பாக, கனரா வங்கி, பேங்க் ஆப் மகாராஷ்டிரா ஆகியவை பல ஆண்டுகால உச்சத்தைத் தொட்டுள்ளன. இந்தியன் வங்கி, யூகோ வங்கி, யூனியன் பேங்க், பஞ்சாப் அண்டு சிந்து வங்கி ஆகியவை 2 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்தன. பண்டிகை காலத் தேவைகள் மற்றும் நிறுவனங்களின் கடன் தேவை அதிகரித்துள்ளதால், வங்கிகளின் லாபம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர, ரொக்க இருப்பு விகிதத்தில் கிடைத்துள்ள சலுகைகள் வங்கிகளுக்கு கூடுதல் பலனை தந்துள்ளதாகவும், கொரோனா காலத்துக்கு பிறகு, நிறுவனங்கள் தங்கள் கடன்களை குறைத்து, நிதிநிலையை சீரமைத்துள்ளதும் வங்கித் துறைக்கு சாதகமாக அமைந்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.