வாடிக்கையாளரை உறுதி செய்ய தவறியதால் ஏற்படும் பண இழப்புக்கு வங்கியே பொறுப்பு வருகிறது ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறை
மும்பை:டிஜிட்டல் பரிவர்த்தனையில் வாடிக்கையாளரின் பாதுகாப்பை உறுதி செய்யத் தவறி, பண இழப்பு நேரிட்டால், அதற்கு வங்கியே முழு பொறுப்பு என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வாடிக்கையாளரை உறுதி செய்வதில் தவறு நேர்ந்தால், பணத்தை வங்கி தான் வழங்க வேண்டும் என, புதிய உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிக்கே முழு பொறுப்பு:
டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையின்போது, வங்கியின் பாதுகாப்பு விதிமுறைகளில் ஏதேனும் குறைபாடு ஏற்பட்டு, அதன் காரணமாக வாடிக்கையாளருக்கு இழப்பு ஏற்பட்டால், அந்த முழு நஷ்டத்திற்கும் வங்கி அல்லது நிதி நிறுவனமே பொறுப்பேற்க வேண்டும். மேலும், வாடிக்கையாளருக்கு ஏற்பட்ட இழப்பை, தாமதமின்றி முழுமையாக ஈடு செய்ய வேண்டும்.
இரட்டை அங்கீகாரம் கட்டாயம்:
இந்தியாவில் செய்யப்படும் ஒவ்வொரு டிஜிட்டல் பேமென்ட்டும், குறைந்தது இரண்டு வெவ்வேறு அங்கீகார முறைகளை பயன்படுத்தி உறுதி செய்யப்பட வேண்டும். அவை: உங்களுக்கு தெரிந்த ஒன்று:
கடவுச்சொல், பின் நம்பர் போன்றவை உங்களிடம் இருக்கும் ஒன்று:
கார்டு, ஓ.டி.பி., போன்றவை நீங்கள் யார்:
கைரேகை, முக அங்கீகாரம் போன்ற பயோமெட்ரிக் தரவுகள் அத்துடன் இரண்டு காரணிகளில் ஒன்று, ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் பிரத்யேகமானதாக இருக்க வேண்டும். அதாவது ஓ.டி.பி., போன்று ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படுவதாக இருக்க வேண்டும். ரிஸ்க் அடிப்படையிலான கூடுதல் சோதனை
வங்கிகள், அதிக மதிப்புள்ள அல்லது வழக்கத்திற்கு மாறான பரிவர்த்தனைகள் நடப்பதாக சந்தேகித்தால், கூடுதல் தகவல்களைக் கேட்டு உறுதிப்படுத்திக் கொள்ளலாம். வங்கிகள் வாடிக்கையாளரின் இருப்பிடம், அவர்கள் பயன்படுத்தும் ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற சாதனத்தின் விபரங்கள், செலவு செய்யும் பழக்கம் போன்றவற்றின் அடிப்படையில், வழக்கத்திற்கு மாறான அல்லது, அதிக மதிப்புள்ள பரிவர்த்தனை நடப்பதாக இருப்பின், கூடுதல் உறுதிப்படுத்தலை டிஜிலாக்கர் போன்ற ஆதாரங்களுடன் மேற்கொள்ளலாம். நோக்கம்
டிஜிட்டல் பணப் பரிமாற்றம் அதிகரித்து வரும் இந்தச் சூழலில், வாடிக்கையாளர்களை மோசடிகளில் இருந்து பாதுகாத்து, அவர்களிடையே நம்பிக்கையை அதிகரிப்பதே, இந்த புதிய விதிகளை அமல்படுத்தியதன் நோக்கமாகும். இந்த விதிமுறைகள் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வருகின்றன.