| ADDED : நவ 29, 2025 01:56 AM
ரூபாய் மதிப்பு இந்த வாரத்தின் முடிவில், துவங்கிய இடத்திலேயே நிலை கொண்டிருந்தாலும், சந்தை உணர்வு மெல்ல தேறி வருகிறது. முதலீட்டாளர்கள் மத்தியில் இருந்த தயக்கம் மறைந்து, பல சாதகமான காரணிகள், ரூபாயின் மதிப்பை உயர்த்துவதற்கான அறிகுறிகளை காட்டுகின்றன. நிப்டி 50 மற்றும் சென்செக்ஸ் ஆகிய இரண்டு குறியீடுகளும் புதிய உச்சத்தை தொட்டன. கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு வருவாய், வலுவான நுகர்வு, பணவீக்கம் குறைவு மற்றும் வரி சலுகைளும் சிறப்பாக உள்ளன. இது, வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிசம்பர் மாதத்தில் 48,000 கோடி ரூபாய் நிதி திரட்டும் இலக்குடன் 28 நிறுவனங்கள் ஐ.பி.ஓ.,க்கள் வெளியிட உள்ளன. சந்தையின் ஒட்டுமொத்த விற்பனையாளராக அன்னிய முதலீட்டாளர்கள் இருந்தாலும், 2025ல் இதுவரை ஐ.பி.ஓ.,க்களில் 8 பில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளனர். அமெரிக்காவின் அதிக வரிகள் இருந்தபோதிலும், இந்தியாவின் ஏற்றுமதி ஏப் ரல் - அக்டோபர் வரையிலான காலத்தில் தொடர்ந்து வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இது, உலகளாவிய கடினமான சூழலிலும் நம் நாட்டின் பொருளாதாரம் வலிமையாக இருப்பதை உணர்த்துகிறது. அமெரிக்காவில் கடன் வட்டி விகிதங்கள் வரும் டிசம்பர் மாத கூட்டத்தில் குறைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக, சர்வதேச அளவில் அமெரிக்க டாலர் பலவீனமாக காணப்படுகிறது. இது, ரூபாய் போன்ற கரன்சிகள் எளிதாக மூச்சுவிட உதவுகிறது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு, தற்போது 88.90-89.80 என்ற வரம்பிற்குள் இருக்கும் என கணிக்கப்படுகிறது. 88.80 - 89.00 ஆதரவு நிலையாக இருக்கிறது.