வீட்டில் பணம் வைத்திருக்க கூடாதா? வதந்திகளுக்கு மத்திய அரசு விளக்கம்
'நடப்பாண்டு ஏப்ரல் மாதம் முதல், வீட்டில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ரொக்கமாக பணம் வைத்திருந்தால் அபராதம் விதிக்கப்படும்' என சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல் தவறானது என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. மத்திய அரசின் புதிய வருமான வரிச் சட்டம் 2025ன் படி, வரும் 2026 ஏப்ரல் முதல், வீட்டில் பணம் வைப்பதற்கு உச்ச வரம்பு நிர்ணயிக்கப்படும்; அதிக பணம் வைத்திருந்தால் கடுமையான அபராதம் விதிக்கப்படும்; ரொக்கப் பரிவர்த்தனைகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்படும் என்பன போன்ற தகவல்கள், வீடியோக்களாக அதிகம் பகிரப்பட்டு வருகின்றன. இந்த தகவலை, மத்திய அரசின் அதிகாரப்பூர்வ தகவல் அமைப்பான பி.ஐ.பி., மறுத்துள்ளது. 1961ம் ஆண்டின் வருமான வரி சட்டத்தை எளிமையாக்குவதே புதிய சட்டத்தின் நோக்கம். இதில் ரொக்கப் பரிவர்த்தனைகள் அல்லது பணம் வைத்திருப்பது தொடர்பாக எந்த ஒரு புதிய விதியோ, அபராதமோ சேர்க்கப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் மொழியை எளிமையாக்கவும், குழப்பங்களைக் குறைக்கவும் மட்டுமே இந்தச் சட்டம் கொண்டு வரப்படுகிறது. இது கொள்கை ரீதியான பெரிய மாற்றங்களை ஏற்படுத்தாது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, சமூக வலைதள வீடியோக்களை நம்பி பீதியடைய வேண்டாம் என்றும் உண்மையான தகவல்களுக்கு வருமான வரித்துறையின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.