ஜீரோ பேலன்ஸ்: மியூச்சுவல் பண்டு முதலீட்டுக்கு ஏற்ற வழி எது?
இந்திய மியூச்சுவல் பண்டு தொழில், மிகப்பிரமாண்டமாக வளர்ந்து வருகிறது. 53 பண்டு நிறுவனங்கள், கிட்டத்தட்ட 75 லட்ச கோடி ரூபாய்க்கு மேலான சொத்துகளை நிர்வாகம் செய்கின்றன. இதில், 52 சதவீதப் பணம் வழக்கமான திட்டங்களிலும்; 48 சதவீதம் நேரடித் திட்டங்களிலும் முதலீடு செய்யப்படுகின்றன. வித்தியாசம் என்ன?
நேரடி மற்றும் வழக்கமான திட்டங்கள் இரண்டுமே, ஒரே பண்டு மேலாளர் நிர்வகிக்கும், ஒரே மியூச்சுவல் பண்டுத் திட்டத்தில் தான் முதலீடு செய்கின்றன. நீங்கள் எப்படி முதலீடு செய்கிறீர்கள், யார் உதவுகின்றனர் என்பதில் தான் வித்தியாசம். நேரடி திட்டம்: நீங்களே பண்டு நிறுவனத்தில் நேரடியாக முதலீடு செய்வீர்கள். இடைத்தரகர் கிடையாது, கமிஷன் கிடையாது. வழக்கமான திட்டம்: வினியோகஸ்தர் அல்லது நிதி ஆலோசகர் வாயிலாக முதலீடு செய்வீர்கள். ஆலோசனைக்காகவும், தொடர் வழிகாட்டுதல்களுக்காகவும் அவர் கமிஷன் பெறுவார். நேரடி திட்டத்தை தேர்வு செய்வது ஏன்?
நேரடித் திட்டத்தின் பெரிய கவர்ச்சி, செலவு குறைவு. 'எக்ஸ்பென்ஸ் ரேஷியோ' நேரடித் திட்டத்தில் சராசரியாக ஒரு சதவீதம் வரை குறைவாக இருக்கும். நீண்டகால அளவில் இந்த ஒரு சதவீத வித்தியாசம் பல்கி பெருகி, கூடுதல் லாபம் ஈட்டித்தரும். ஆனால், செலவை மட்டும் கவனிக்க வேண்டுமா? அவசியமில்லை. சரியான பண்டுத் திட்டத்தைத் தேர்வு செய்வது தான் முக்கியம். யாருக்கு நேரடி திட்டம்: அனுபவம் நிறைந்தவர்கள் நேரடித் திட்டத்தைத் தேர்வு செய்யலாம். பங்குகள், கடன் பத்திரங்கள், தங்கம், ஹைபிரிட் பண்டுகளுக்கு இடையே எவ்வளவு சதவீதம் முதலீடு செய்யலாம் என்பது அவர்களுக்குத் தெரியும். சந்தையின் ஏற்ற இறக்கங்கள், துறைகளின் வருவாய், நீண்டகால இலக்குகள், தேவையான பண்டுகள் ஆகியவை குறித்து அனுபவசாலிகள் அறிவர். கார்ப்பரேட் பெருநிறுவனங்களும், அறக்கட்டளைகளும் நேரடித் திட்டத்தின் வாயிலாகவே முதலீடு செய்யும். குறிப்பாக, கடன் பத்திரம் சார்ந்த பண்டுகளில் முதலீடு செய்வர். அவர்கள் நிறுவனத்திலேயே முதலீட்டு நிபுணர் இருப்பதால், நேரடித் திட்டங்களுக்கே செல்வர். வழக்கமான திட்டத்துக்கு மவுசு ஏன்?
நேரடித் திட்டங்கள் எளிமையாகத் தெரியலாம். ஆனால், மியூச்சுவல் பண்டு துறை தற்போது மிக சிக்கலாக மாறிவிட்டது. பல்வேறு பண்டு வகைகளின் கீழ் ஒவ்வொரு நிறுவனமும், மாதாமாதம் புதுத் திட்டங்களை அறிமுகம் செய்கின்றன. சரியான பண்டுகளைத் தேர்வு செய்வதும், நிர்வகிப்பதும் இனிமேல் எளிமையான வேலையாக இருக்கப் போவதில்லை. கடந்த சில ஆண்டுகளில் பங்குச் சந்தைக்குள் வந்த புதிய முதலீட்டாளர்களுக்கு, மியூச்சுவல் பண்டுத் திட்டங்களைப் பற்றிய போதிய ஞானம் இராது. சந்தை ஏற்ற இறக்கத்தை எப்படி சமாளிக்க வேண்டும் என்ற விபரமும் தெரியாது. இப்போது கிட்டத்தட்ட 60 சதவீத முதலீட்டாளர்கள், சந்தை சரிவை முதன்முறையாக பார்க்கின்றனர். பங்குச் சந்தை ஒவ்வோர் ஆண்டும் 20 சதவீத வளர்ச்சி தரும் என்ற நம்பிக்கை தகர்ந்து கொண்டிருக்கிறது. இத்தகைய முதலீட்டாளர்களுக்கு, வழக்கமான திட்டத்தை எடுத்துச் சொல்லும் ஆலோசகர்கள் பின்வரும் உதவிகளைச் செய்வர். * எந்தெந்த சொத்துகளில் எவ்வளவு சதவீதம் முதலீடு செய்ய வேண்டும் * இலக்குக்கு ஏற்ப திட்டமிடல் * ஏற்ற இறக்கத்தின் போது பதற்றமடையாமல் இருப்பது எப்படி * தொடர்ந்து மறுபரிசீலனை செய்து போர்ட்போலியோவை சீரமைத்தல். செலவு முக்கியமல்ல பணத்தைப் பரவலான சொத்துகளில் முதலீடு செய்வது, அபாயங்களைப் புரிந்துகொள்வது, சந்தையைத் தொடர்ந்து கவனிப்பது ஆகியவற்றைச் செய்யும் அனுபவசாலி முதலீட்டாளர்கள், நேரடி திட்டங்களைத் தேர்ந்தெடுக்கலாம். புதிய அல்லது அனுபவமில்லாத முதலீட்டாளர்கள், ஆலோசகரைத் தவிர்த்து ஒரு சதவீதத்தை மிச்சம் பிடித்துவிடலாம் என்று நினைப்பது, மொத்த நிதி திட்டமிடலையே பாதிக்கும். செலவு சிக்கனத்தைவிட, ஆலோசனை, ஒழுங்கு, முறையான சொத்து பரவலாக்கமே முக்கியம். உங்கள் இலக்கு, அபாயங்களைத் தாங்கக்கூடிய சக்தி, முதலீட்டுக் காலம் என்பதையெல்லாம் தெரிந்துகொள்ளாமல் மியூச்சுவல் பண்டு திட்டங்களைத் தேர்வு செய்வது, கூகுள் மேப் இல்லாமல் வண்டியோட்டுவது போன்றது. வண்டி நகர்ந்துகொண்டு தான் இருக்கும், ஆனால், இலக்கை அடைய மாட்டீர்கள். ஆலோசகர் அவசியம் ஆலோசகர் என்பவர் ஒரு மருத்துவர் அல்லது வழக்கறிஞர் போல். நோய் வந்தால் மருத்துவரையும், சட்டச் சிக்கல்கள் வந்தால் வழக்கறிஞரையும் பார்க்கிறோம். உடல்நிலை, சட்டம் பற்றி 'ஏதோ கொஞ்சம்' தெரிந்திருந்தாலும், நாமே வைத்தியம் பார்த்துக்கொள்வதில்லை. முதலீட்டிலும், 'ஏதோ கொஞ்சம்' தெரிந்தால் போதாது. சரியான நிதி ஆலோசகர், உணர்வு ரீதியான ஒழுங்கையும், சந்தைப் புரிதலையும், எவ்வளவு வருவாய் ஈட்ட முடியும் என்ற முறையான திட்ட மிடலையும் வழங்குவார். அதேசமயம், சரியான நிதி ஆலோசகரைத் தேர்வு செய்வதும் முக்கியம். மோசமான ஆலோசகர், வழக்கமான திட்டத்தின் வருவாயையும் குலைக்க முடியும். நல்ல ஆலோசகர், சந்தையையும் புரிந்துகொள்வார், உங்கள் தனிப்பட்ட இலக்குகளையும் புரிந்துகொள்வார். சிறிய கட்டணத்தை மிச்சப்படுத்துவது நல்லது தான். ஆனால், இலக்கை அடையமுடியாமல் தோல்வி ஏற்படுவதைத் தவிர்ப்பது அதைவிட முக்கியம். சரியான திட்டம் என்பது சந்தையைப் பொறுத்து அமைவதல்ல, முதலீட்டாளரான உங்களைப் பொறுத்தே அமையும். சி.கே.சிவராம் நிறுவனர், ஐகுளோபல் ஆல்டர்நேட்